தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் பரஸ்பரம் கருத்துமோதல் நடத்தி வருகிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, பிரசாரத்தின்போது, ‘செந்தில் பாலாஜி பல்லை உடைப்பேன்’ என்று பேசியது சர்ச்சையானது. தொடர்ந்து, தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சரானார். இந்த நிலையில், அண்ணாமலை, செந்தில் பாலாஜி மீது ஊழல் புகாரைத் தொடர்ந்து சுமத்திவருகிறார்.

பதிலுக்கு செந்தில் பாலாஜி அண்ணாமலையை, ‘படித்த முட்டாள், வேலைவெட்டி இல்லாதவர்’ என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். விடாத அண்ணாமலை, ‘தனியாரிடம் மின்சாரம் பெற்றதில் கமிஷன் பெற்றிருக்கிறார்’ என்று செந்தில் பாலாஜியை விமர்சித்தார். அதற்கு செந்தில் பாலாஜி, ‘என்மீது அவர் சுமத்தும் புகாருக்கு ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும்’ என்று ‘டெட்லைன்’ கொடுத்து, பதிலடி கொடுத்தார். சமூக வலைதளங்களிலும், மீடியா பேட்டிகளிலும் பரஸ்பரம் இருவரும் இப்படி தொடர்ந்து கருத்துச் சண்டை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், அண்ணாமலைக்கு எதிராக தனது ஃபேஸ்புக் தளத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து ஒன்றை பதிவுசெய்திருக்கிறார்.

செந்தில் பாலாஜி அந்தப் பதிவில், “தமிழ்நாட்டில் உள்ள பூத் எண்ணிக்கைகூட பா.ஜ.க மாநிலத் தலைவருக்குத் தெரியாது! 68,019 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் 66,000 சாவடிகள்தான் உள்ளன என்பார். களமும் தெரியாது; தரவும் தெரியாது. சமூக ஊடகத்தில் ‘படம்’ ஓட்டி விளம்பரம் செய்து கொண்டிருப்பவருக்கு தேர்தலில் தமிழ்நாடு பாடம் கற்பிக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.