கோவையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற `Youth Talks’ என்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடம் உரையாடிய தி.மு.க எம்.பி கனிமொழி, தன் வாழ்வில் நடந்த பல சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, “இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள்தான் இளைஞர்களின் குரலாகவும் சமூக மாற்றத்தின் முன்னோடியாகவும் விளங்குகின்றன. டிஸ்லைக், அவதூறான கமென்ட் இதெல்லாம் நம்மைத் தீர்மானிக்க முடியாது. சமூக வலைதளத்தைப் பொழுதுபோக்குக்கு மட்டுமன்றி ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்த வேண்டும்” என்றார்.

அதைத் தொடர்ந்து கனிமொழி மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை `அம்மா’ என அழைப்பது போல, பல இடங்களில் உங்களையும் அக்கா’ன்னு கூப்பிட்டு வராங்க இதை நீங்க எப்படி நினைக்குறீங்க?
“என் பெயர் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அனைவரும் கனிமொழி என்றே அழைக்கலாம். தமிழுக்குக் கனிமொழி என்றும் பெயர் உண்டு. அதுமட்டுமின்றி தலைவர் கலைஞருக்கு மிகவும் பிடித்த பெயர்.”
மத்தியில் நடக்கிற இந்தி மொழி திணிப்பு குறித்து சொல்லுங்களேன்?
“மத்தியிலிருந்து வரும் கடிதங்களுக்கு நான் மறுமொழி கடிதம் தமிழில்தான் அனுப்புவேன். பல நேரங்களில் பல இந்தி வார்த்தைகள் புரிவதில்லை, எனக்குப் புரியும் மொழியில்தான் நான் உரையாடுவேன்.”
இலவச பஸ் குறித்த சர்ச்சைப் பேச்சு குறித்து சொல்லுங்களேன்?
“வேலைக்கும், கல்லூரிகளுக்கும் சென்று வரும் மகளிருக்கு எங்களால் முடிந்த திட்டம்தான் `இலவச பஸ்’ திட்டம். மக்களின் வரிப்பணத்தில்தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதலால் யாரும் `ஓசி பஸ் பயணம்’ எனச் சொல்லமுடியாது. அதேபோல மகளிர் கண்டக்டர்கள் கூறும் கருத்துகளை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை.”

வாழ்நாளில் நீங்கள் மனதளவில் உடைந்த காலம் எது?
நான் ஒரு முறை அல்ல இரண்டு முறை மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு உடைந்துள்ளேன். அவசர காலநிலையின்போது தி.மு.க-வினர் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்றைய முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் சுமார் ஒரு வருடம் சிறை வசப்பட்டார். அந்தக் காலத்தில் கழகத்தினரின் பெருந்துணை இருந்ததால் மீண்டு வர முடிந்தது. 2-ஜி விவகாரத்தில் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டேன்.”
ஒரு பெரிய அரசியல்வாதியின் மகளாக அரசியலுக்குள் நுழைந்தீர்களா? அல்லது சொந்த விருப்பத்தின்பேரில் நுழைந்தீர்களா?
“நிருபர், எழுத்தாளர் என்றே நகர்ந்த என் வாழ்வில், தலைவர் கலைஞருக்கான உதவியாக அரசியலுக்குள் நுழைந்தேன். பின்பு இப்போது இந்த நிலையை அடைந்திருக்கிறேன்.”
மக்களவையில் உங்களது காரசார விவாதங்களை அதிகம் கேட்டு வருகிறோம், இனி எப்போது தமிழகச் சட்டமன்றத்தில் உங்களது குரலைக் கேட்கலாம்?
“மக்களவையில் நான் ஆற்றி வரும் பங்கே எனக்கு மிகுந்த ஆனந்தமாக இருந்து வருகிறது. அதையும் தாண்டி கழகத்தினர் முடிவு செய்தால் கண்டிப்பாகச் சட்டமன்றத்திலும் எனது குரல் ஒலிக்கும்.”

பள்ளிகளில் சாதிச் சான்றிதழ் வாங்கப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
“பத்தாம் வகுப்பில் சாதிச் சான்றிதழ் வாங்கப்படுவது எத்தனை மாணவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வருகின்றனர் என்றும், அவர்களின் நிலையை உயர்த்த மேலும் எவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் கணிக்கவே வாங்கப்படுகிறது. சாதி மத ஏற்றத்தாழ்வு, வாய்ப்பில்லாதவர்கள் என அனைவரையும் கருத்தில் கொண்டு நகர்வதுதான் திராவிட அரசியல்.”