கும்பகோணம் மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டதால் தீக்குளிக்க முயற்சி!
கும்பகோணத்தை சேர்ந்த விமலா என்ற பெண் தன் குடும்பத்தினருடன் தலைமைச் செயலகத்திற்கு வந்துள்ளார். தலைமைச் செயலகத்தில் உள்ளே நுழைந்த அவர் நான்காவது நுழைவாயில் அருகே வெகு நேரமாக நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது அவர் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிக்க விடாமல் தடுத்துள்ளனர்.

பிறகு விமலாவை மீட்ட போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணம் மாநகராட்சியில் தனக்கு சொந்தமான நிலத்தை மாநகராட்சி எடுத்துக் கொண்டாதால் விமலா தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விமலா தனக்கு சொந்தமான நிலங்களை கும்பகோணம் மாநகராட்சிக்கு வழங்கியுள்ளதாகவும் அதையும் மீறி அவருடைய பூர்வீக சொத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை கும்பகோணம் மாநகராட்சி ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் இத்தகைய முடிவை விமலா எடுத்துள்ளதாக விசாரணை தெரிய வந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வேல்முருகன் என்பவர் தன் மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்கவில்லை என்ற காரணத்திற்காக தீக்குளித்து உயிரிழந்த நிலையில் தற்பொழுது சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்கும் முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.