ஈரான் பெண்களுக்கு ஆதரவாக உலகம் முழுக்க தலைமுடியை வெட்டும் பெண்கள்… வலுக்கும் எதிர்ப்பு!

ஈரானில் தனது தலைமுடியை மறைக்கத் தவறியதற்காக ஒரு இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவம், உலகளாவிய அளவில் எதிர்ப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் ஹிஜாப் அணிவது சமீபத்தில் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக பெண்களின் தலைமுடி கூட தெரியாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஹிஜாப்-ஐ மிகச்சரியாக அணிய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாட்டுக்குப் பின்னான சில நாள்களில், அந்நாட்டின் தெஹ்ரான் பகுதியிலிருந்த சில பெண்கள் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்பதற்காகவும், குறிப்பாக தலைமுடி தெரியும்படி ஹிஜாப் அணிந்தனர் என்பதற்காகவும் அங்கிருந்த பாதுகாப்பு படையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளாகினர்.

ஈரான் போராட்டம்

இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்ட, 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த மாதம் 17-ம் தேதி உயிரிழந்தார். மாஷா, தனது தலைமுடியை மறைக்கும்படி ஆடை அணியவில்லை என்பதற்காக அந்த தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. மாஷா, ஈரானின் குர்திஷ் சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்தவர். அவர் தன் ஆடைக்கட்டுப்பாட்டுகளுக்கு எதிரான தன் குரலை தொடர்ந்து பகிர்ந்து வந்திருக்கிறார்.

மாஷா மீதான வன்முறையையும், அவர் கொலை செய்யப்பட்டதையும் கண்டித்து ஈரான் முழுவதும் பல பெண்கள் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர். குறிப்பாக ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் அவர்கள் போராடினர். மேலும், உலகம் முழுக்க உள்ள பெண்களும் இந்தப் பிரச்னையில் தங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், தங்கள் தலைமுடியை வெட்டி, அதை வீடியோவாக பதிவு செய்து #HairForFreedom என்ற ஹேஷ்டேக்கில் அதை இணையத்தில் பகிர்ந்துவருகின்றனர். இதன் மூலம், மாஷா மீதான வன்முறைக்கு தங்கள் குரலை அவர்கள் உலகறிய செய்து வருகின்றனர். `என் முடியிலும் கூட, எனக்கு சுதந்திரம் உள்ளது’ என்ற இந்த கருத்துள்ள வீடியோக்கள் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன. இந்த முன்னெடுப்பில் பிரென்ச் நடிகைகளான மரியன் கோட்டிலார்ட் மற்றும் ஜூலியட் பினோச் உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்துள்ளனர்.

இவையெல்லாம் உலகம் முழுக்க நடந்தாலும்கூட, ஈரானில் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. அங்கு தொடர்ந்து பதற்றமே நீடிக்கிறது. குறிப்பாக மாஷா இறந்த இடமான குர்தீஷ் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே போராட்டம் தொடர்கிறது. சுமார் 4 வாரங்கள் ஆன பின்னரும் கூட, இப்போது மாஷா வாழ்ந்த பகுதியில் போராட்டம் நீடிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சமூகவலைதள வீடியோக்கள் சில தெரிவிக்கும் தகவலின்படி குர்தீஷ் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் பச்சை நிற டேங்குகள், அணிவகுத்து நிற்கின்றன. சிலரின் வீடியோக்களில், பின்னணியில் குண்டு வெடிப்பு சத்தமும் கேட்கிறது. இவை தற்போதுள்ள நிலவரம் தானா என்று சர்வதேச ஊடகங்களே உறுதிசெய்யமுடியாத சூழலும் அங்கு நிலவுகிறது.

இரான்

எதிர்ப்பை காட்டுவதற்காக, ஈரானின் உயரடுக்கு புரட்சிகர காவலர் படை சிலைக்கு போராட்டக்காரர்களும் பொதுமக்களும் தீ வைக்கும் வீடியோ காட்சிகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த மொத்த கலவரத்தில், 19 சிறுவர்கள் உட்பட குறைந்தபட்சம் 185 பேராவது கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இவர்களன்றி பாதுகாப்புப் படையினரால் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டும், நூற்றுக்கணக்கணக்கானோர் துன்புறுத்தப்பட்டும் இருக்கின்றனர். ஈரானிய அரசின் தகவல்படி, 20-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

எல்லாவற்றுக்கும் இடையே, #HairForFreedom என்ற ஹேஷ்டேக்குடன் பெண்கள் பலரும் அழுதபடி தங்கள் தலைமுடியை வெட்டிக்கொள்ளும் வீடியோக்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

– இன்பென்ட் ஷீலா

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.