வலையில் விழுந்த பெரும் புள்ளிகள்? – ஒடிசா அரசியலை கலங்கடித்த இளம்பெண்; திரைப்படமாகும் `அர்ச்சனா' கதை

ஒடிசாவின் வறட்சி மண்டலம் எனப் பெயர்பெற்ற கலஹண்டி மாவட்டத்தின் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா நாக் (26). ஆனால், இப்போது இறக்குமதி செய்யப்பட்ட அலங்கார பொருட்கள், சொகுசு கார்கள், நான்கு விலை உயர்ந்த நாய்கள் மற்றும் ஒரு வெள்ளை குதிரையுடன் ஒரு அரண்மனை போன்ற வீட்டை வாங்கி குட்டி சாம்ராஜ்யத்தை நடந்தி வந்திருக்கிறார். இது எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு காவல்துறை விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

அர்ச்சனா – ஜகபந்து சந்த் தம்பதி

இது தொடர்பாக புவனேஸ்வர் டிசிபி பிரதீக் சிங் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “கலஹண்டியில் உள்ள லான்ஜிகரில் பிறந்த அர்ச்சனா, அதே மாவட்டத்தில் உள்ள கேசிங்கா-வில் அவரது தாயார் பணிபுரிந்து வந்த இடத்தில் வளர்ந்தார். 2015-ல் புவனேஸ்வருக்கு வந்த அர்ச்சனா முதலில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிந்ததாகவும், பின்னர் அழகு நிலையத்தில் சேர்ந்ததாகவும் தெரியவந்துள்ளது. அங்கு பாலசோர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜகபந்து சந்த் என்பவரை சந்தித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

ஜகபந்து பழைய கார்களை விற்கும் தொழில் செய்து வந்தார். அதன்மூலம் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் போன்ற பணம் படைத்தவர்களை அறிந்திருந்தார். அவர்களிடம் அர்ச்சனா நட்பாக பழகினார். மேலும் அவர்களுக்கு பல பெண்களை அறிமுகப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பெண்களுடன் அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை எடுத்து அவர்களை மிரட்டி, கணவனும் மனைவியும் பணம் பறிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அர்ச்சனா – ஜகபந்து சந்த் தம்பதி

இந்த நிலையில், நாயப்பள்ளி காவல் நிலையத்தில் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர், சில பெண்களுடன் நான் இருக்கும் புகைப்படங்களைக் காட்டி அர்ச்சனா தன்னிடம் ரூ. 3 கோடி கேட்டதாக புகார் அளித்தார். மேலும், அர்ச்சனா தன்னையும் இந்த மோசடியில் பயன்படுத்தியதாக ஒரு பெண்ணும் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கடந்த 6-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அர்ச்சனாவின் வலையில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களும், பெரும் பெரும் செல்வாக்கு மிக்கவர்களும் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

2018 முதல் 2022 வரையிலான நான்கு ஆண்டுகளில் மட்டுமே அர்ச்சனா – ஜகபந்து சந்த் தம்பதி ரூ.30 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியது தெரியவந்துள்ளது. அர்ச்சனா மீது இதுவரை இரண்டு வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அர்ச்சனாவால் பிளாக்மெயில் செய்யப்பட்ட மற்றவர்கள் அவர் மீது புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

அர்ச்சனா – ஜகபந்து சந்த் தம்பதி

இந்த நிலையில் தற்போது சில எம்.எல்.ஏ-க்கள் உட்பட செல்வாக்கு மிக்க நபர்களுடன் அர்ச்சனாவும் அவரது கணவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி, மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புவனேஸ்வர் பா.ஜ.க பிரிவுத் தலைவர் பாபு சிங், “18 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட 25 அரசியல் தலைவர்கள், அவர்களில் பெரும்பாலோர் பி.ஜே.டி-யைச் சேர்ந்தவர்கள் அர்ச்சனாவின் வலையில் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

அர்ச்சனா – ஜகபந்து சந்த் தம்பதி

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த ஆளும் பி.ஜே.டி, “காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி இந்த விவகாரத்தில் பி.ஜே.டி கட்சித் தலைவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் வழங்கட்டும்” எனச் சவால் விட்டிருக்கிறது.

இந்த வழக்கு ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஒடியா திரைப்பட தயாரிப்பாளர் ஸ்ரீதர் மார்த்தா, அர்ச்சனாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.