இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு `கைலாசா’ நாட்டில் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படும் நித்தியானந்தாவிடம், திருச்சி சிவா மகனும் தமிழக பா.ஜ.க ஓபிசி பிரிவு பொதுச்செயலாளருமான சூர்யா சிவா “தர்மரக்சகா” விருது பெற்றுள்ளார். சமூக வலைதளங்களில் பேருபொருளாக மாறியிருக்கும் அவரிடம் பல கேள்விகளை முன்வைத்தோம்..
“நித்தியானந்தாவிடமிருந்து ‘தர்மரக்சகா’ விருது வாங்கியிருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல..?”
“இந்து மதத்தை ஆதரித்து உலக அளவில் கருத்துக்கள் பேசி வருவதால் சுவாமி ஜி இந்த விருதை எனக்குக் கொடுத்துள்ளார். இந்த விருது எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். ரொம்ப பெருமையாக இருக்கிறது.”
“விருதோடு கோடிக்கணக்கில் பணமும் வாங்கியுள்ளீர்கள் என்று சொல்கிறார்களே?”
“திருச்சி சிவா பையனுக்குப் பணத்திற்காகப் பேச வேண்டும், விருது வாங்கவேண்டும் என்று எந்த அவசியம் கிடையாது. எங்கள் தாத்தா காலத்திலேயே நாங்கள் விவசாய நில புலன்களோடு சவுகரியமாக வாழ்ந்த குடும்பம். 50 வருட அரசியல் வாழ்க்கையில் என்னோட அப்பா 30 வருடம் எம்.பியாகவே இருக்கிறார். பா.ஜ.கவுக்கு போனால் பணம் வாங்கிவிட்டு சென்றுவிட்டார் என்றும், நித்தியானந்தாவுக்கு ஆதரவாக பேசினால் நித்தியிடம் பணம் வாங்கிவிட்டார் என்றும் சொல்வது அபத்தமாக இருக்கிறது.”
“விருது பெற்ற உங்களிடம் நித்தியானந்தா என்ன பேசினார்?”
“விருது பெறுவதற்கு 4 நாள்களுக்கு முன்பாக அவரிடம் 2 நிமிடம் மட்டுமே பேசினேன். ‘உங்களின் தீவிர பக்தன் நான். உங்களைப் பார்ப்பதைப் பாக்கியமாக நினைக்கிறேன் என்றேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே ‘நன்றி’ என்றார். நல்லதே நடக்கும். அரசியல் பயணம் நல்லபடி தொடரும். வாழ்த்துக்கள்” என்றார்.
“நித்தியானந்தாவிடம் விருது வாங்கியதை உங்கள் தலைவர் அண்ணாமலையிடம் சொன்னீர்களா?”
“அண்ணாமலை அமெரிக்கா சென்றதால் என்னால் கூறமுடியவில்லை. அவர் என்னுடைய ட்விட்டர், ஃபேஸ்புக் பாலோயராக இருக்கிறார். அதனால், கண்டிப்பாகப் பார்த்திருப்பார்.”
“நித்தியானந்தா உண்மையிலேயே எங்கு இருக்கிறார்.. இருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்கிறார்களே?”
“அவர் கைலாசா நாட்டில் தான் இருக்கிறார். நான் ‘ஜூம் காலில்’ பேசியபோது கூட கைலாசாவிற்கு தனியாக அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். என்னுடைய சின்ன வயதிலிருந்தே நான் நித்தியானந்தாவின் தீவிர பக்தன். வெளிநாடுகளில் இருக்கக்கூடிய முக்கிய நபர்கள் அவரின் தரிசனத்திற்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்குக் காட்சி தராதவர் எனக்கு விருது கொடுத்துள்ளார். அவர் என்னுடைய ஆன்மீக குரு, நான் அவரின் ஆன்மிக தொண்டன். இதுவே எங்களுக்கு இடையிலான தொடர்பு.”

“நித்தியானந்தாவை நேரில் பார்த்திருக்கிறீர்களா?”
“இல்லையே…இல்லையே… அதற்கெல்லாம் வாய்ப்பே கிடைத்ததில்லை. வீட்டில் நித்தியானந்தாவின் படத்தை வைத்திருக்கிறேன். காலையில் எழுந்தவுடன் அவரை தான் பார்ப்பேன். கைலாசா செல்ல வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அவரை சென்று பார்த்துவிட்டு வருவேன். தயாராக இருக்கிறேன்.”
“நித்தியானந்தா ஆசிரமத்தில் உங்களுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட இருக்கிறதாமே?”
“நான் அரசியல் பயணம் செய்து வருகிறேன். இதுபோன்ற பொறுப்புகளுக்கு இதுவரையில் நான் ஆசைப்படவில்லை. அவரை ஒரு குருவாக மட்டுமே பார்க்கிறேன்.”
“தேடப்படும் குற்றவாளி ஒருவருக்கு இந்த அளவுக்கு ஆதரவும், வக்காலத்தும் வாங்குகிறீர்களே?”
“வக்காலத்து வாங்குவது என்று சொல்லாதீர்கள். நியாயம் கேட்கிறேன் என்று சொல்லுங்கள். நித்தியானந்தா மீதான புகார்கள் சித்தரிக்கப்பட்ட அரசியல். அவர் மீதான குற்றங்கள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த நித்தியானந்தாவை உலக மக்கள் தேடி வரும் அளவிற்கு மிகப்பெரிய சக்தியுடன் இருக்கிறார். அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது.”
“தன் மீது தவறு இல்லையென்றால் ஏன் ஓடி ஒளிகிறார்?”
“அவருடைய பக்தனாகச் சொல்கிறேன் அவர் ஓடி ஒளியவில்லை. அவருடைய நியாயத்தை நிரூபிக்க சில நாள்கள் ஆகுமே தவிர இதில் வேறொன்றும் இல்லை. தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தவறு என்று நிரூபித்துவிட்டு தான் அவர் வெளியே வருவார். தலைமறைவாக இருந்தால் அவர் குற்றம் செய்தவர் என்று கூறிவிடமுடியாது. அவர் மீண்டு வருவார். மீண்டும் வருவார்.”

“அப்படியென்றால் பா.ஜ.க நித்தியானந்தாவை ஆதரிக்கிறதா?”
“நாங்கள் அவரை ஆதரித்திருந்தால் அவர் இந்தியாவிற்குள் தானே இருந்திருக்க வேண்டும். அவர் மேலான குற்றச்சாட்டைப் பொய் என நிரூபித்துவிட்டு தான் இந்தியா வருவார். அவர் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் செயலாகத் தான் நாங்கள் அதைப் பார்க்கிறோம். 100 சதவிகிதம் அடித்துச்சொல்கிறேன் அவர் வெளியே வருவார்.”