சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏக்களுக்கு இன்று ஒருநாள் தடை…

சென்னை: எதிக்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு முடிவு எடுக்காததை கண்டித்து, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சபையில் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை அவையில் இருந்து வெளியேற்றிய சபாநாயகர் அவர்கள் அனைவரையும் இன்று ஒருநாள் அவை நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதித்துள்ளார்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில், சபாநாயகர் முடிவு எடுக்காததை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி அவை யில் கேள்வி எழுப்பினார். அவருக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் கோஷமிட்டு, அவையில் அமர்ந்து தர்ணா செய்தனர். இதையடுத்து, அவர்களை அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர், சட்டமன்ற விதிப்படி, சபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே உண்டு. துணைத்தலைவர் பதவி கிடையாது என கூறினார்.

இதையடுத்து, அவர்களை 2 நாள் அவை நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதிப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை அறிக்கைக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டு அமளியில் ஈடுபட்டதாகவும்,  ஜெயலலிதாவுக்கு செய்த அட்டூழியங்கள் வெளியே வந்துவிடும் என்பதால் அதிமுகவினர் அச்சமடைந்துள்ளனர் என்றும் துரைமுருகன் தெரிவித்தார். மேலும், எடப்பாடி தரப்புக்கு விதிக்கப்பட்ட 2 நாள் தடையை குறைக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அவை முன்னவரின் கோரிக்கையை ஏற்று ஒருநாள் மட்டும் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக  சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

சட்டமன்றத்தின் இந்த கூட்டத்தொடர் இன்றும், நாளையும் என 2 நாள்மட்டும்தான் நடைபெற உள்ள நிலையில், இன்று ஒருநாள் அவையில் பங்கேற்க   எதிர்க்கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.