தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் வித்யார்த்தி ஜூனியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தெலுங்கானா அரசுத் தேர்வு வாரியம் (டிஎஸ்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 1 தேர்வு மையமான இந்தக் கல்லூரிக்கு நேற்று காலை நூற்றுக் கணக்கானோர் தேர்வு எழுத வந்தனர்.
அப்போது, தேர்வறைகளுக்கு வெளியே இருந்த போலீசார், தேர்வு எழுத வந்த பெண்கள் அணிந்திருந்த நெக்லஸ், வளையல் ஆகியவற்றை கழட்டி வைத்துவிட்டு தேர்வறைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்படி, அனைத்தையும் கழட்டி வைத்த பெண்கள் தாலியை மட்டும் கழட்டாமல் இருந்தனர்.

ஆனால், தாலியையும் கழட்டி வைத்தால்தான் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பெண்கள், வேறு வழியின்றி தங்கள் தாலிகளை கழட்டி வைத்துவிட்டு தேர்வு எழுதினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அடிலாபாத் எஸ்பி உதய்குமார் ரெட்டி, “தேர்வு எழுத வந்த பெண்களிடம் தாலியை கழட்டுமாறு போலீசார் கூறியது உண்மைதான். இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. சரியான புரிதல் இல்லாமல் போலீசார் இவ்வாறு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
இந்த சம்பவம் குறித்து தெலுங்கானா பாஜக மூத்த தலைவர் பிரீத்தி காந்தி கூறும்போது, “சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்தும் அரசியலில் டிஆர்எஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது என்பதற்கு இதுவே சிறந்த சான்று. உடலையே மூடிக்கொள்ளும் புர்கா உடையை அனுமதிப்பார்களாம். ஆனால், கழுத்தில் மெல்லியதாக இருக்கும் தாலியை அனுமதிக்க மாட்டார்களாம். இது என்ன மாதிரியான அரசியல்..?. இந்து பெண்களை இழிவுப்படுத்தியதற்காக முதல்வர் சந்திரசேகர ராவ் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.