ஐப்பசி மாதத்தில் வரும் இந்த தீபாவளி பண்டிகையானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்திய மக்களின் பாரம்பரிய மரபுகளை சார்ந்த இந்த தீபாவளியானது பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மக்களால் சற்று வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்கள் இந்த பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் நியூயார்க் நகரில் அடுத்த ஆண்டு முதல், தீபாவளி திருநாள் அன்று அரசு பள்ளிகளுக்கு பொது விடுமுறை நாளாக அளிக்கப்படும் என்று அந்நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்தார்.
இது குறித்து நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் கூறுகையில், “தீபாவளி மற்றும் தீபத் திருவிழா என்றால் என்ன என்பதைப் பற்றி நான் நிறைய கற்றுக்கொண்டேன். இந்த நடவடிக்கை, குழந்தைகள் தீபத் திருவிழாவைப் பற்றி அறிய ஊக்குவிக்கும். உங்களுக்குள் உள்ள ஒளியை எவ்வாறு இயக்குவது என்பதை அறிய அவர்கள் முற்படுவார்கள்” என்றார்.
தீபாவளியை பள்ளி விடுமுறையாக மாற்றியதற்காக ஆடம்ஸுக்கு நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்வால் நன்றி தெரிவித்தார். அவர் கூறுகையில், “தீபாவளியை பள்ளி விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்பது, இந்திய-அமெரிக்க சமூகத்தின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. இதன்மூலம், அனைத்து தரப்பு மக்களும் இந்திய நெறிமுறைகள் மற்றும் பாரம்பரியத்தை அனுபவிக்கவும், கொண்டாடவும் முடியும்” என்றார்.
நியூயார்க் நகர பள்ளிகளின் அதிபர் கூறும்போது, “நியூயார்க் நகரம் முழு உலகத்திற்கும் தாயகமாக உள்ளது. நியூயார்க் நகரம் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் சொந்தமானது. அனைத்து சமூகங்கள் மற்றும் பின்னணியைச் சேர்ந்த குழந்தைகள் இங்கு பள்ளிக்குச் செல்கிறார்கள். ஆகவே, நமது இளைஞர்கள், அவர்களது குடும்பம் மற்றும் அவர்களின் நம்பிக்கையை நாம் மதிப்பதும் அங்கீகரிப்பதும் முக்கியம்” என்றார்.