கோத்தகிரி
கோத்தகிரியில் நடந்த மாவட்ட அளவிலான ‘ சி ‘ டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில் பி.எம்.கிங்ஸ் கிரிக்கெட் அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.
டிவிஷன் கிரிக்கெட் போட்டி
நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சி டிவிஷன் பிரிவிற்கான லீக் போட்டியில் பி.எம் கிங்ஸ் கிரிக்கெட் அணி மற்றும் குன்னூர் லெவன்ஸ் கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடின. இந்தப் போட்டியில் டாசை வென்று முதலில் பேட்டிங் செய்த பி எம் கிங்ஸ் கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் குவித்தது. இந்த அணியின் முகமது சலாம் 76 ரன்கள் (அவுட் இல்லை), சிக்கு 52 ரன்கள் (அவுட் இல்லை), மணிகண்டன் 33 ரன்கள், சையது இப்ராகிம் மற்றும் அப்துல் சல்மான் ஆகியோர் தலா 31 ரன்கள் எடுத்தனர். குன்னூர் லெவன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ராகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அபார வெற்றி
இதனைத் தொடர்ந்து 210 பந்துகளில் 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் தொடர்ந்து விளையாடிய குன்னூர் லெவன்ஸ் கிரிக்கெட் அணி 14.5 ஓவர்களில் வெறும் 73 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி படுதோல்வியடைந்தது. இந்த அணி வீரர் ரககேஷ் குமார் அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்தார். பி எம் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் மணிகண்டன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 185 ரன்கள் வித்தியாசத்தில் பி எம் கிங்ஸ் கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது.