`பேருந்து வசதி இல்ல; தினமும் 12 கி.மீ நடக்குறோம்!' – போராட்டம் நடத்தி சாதித்த மாணவர்கள்

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே இருக்கிறது, வடக்கு மேட்டுப்பட்டி கிராமம். மிகவும் பின்தங்கிய கிராமமான இங்கே, தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. இங்குள்ள மாணவர்கள் 6 – 12 – ம் வகுப்பு வரை படிக்க வெளியணையில் உள்ள வரும் அரசு ஆண்கள்/ பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளுக்கு போய்வர வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், இங்குள்ள பல மாணவர்களின் குடும்பச் சூழல், பேருந்துப் பயண கட்டணத்துக்கு செலவழிக்கும் அளவுக்கு பொருளாதார வசதிகொண்டதாக இல்லை. அதனால், அந்த மாணவர்கள் தினமும் காலையும், மாலையும் நடந்தே வெள்ளியணைக்கு சென்று வருவதாக கூறுகின்றனர்.

வெள்ளியணை

60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்படி வெள்ளியணை பள்ளிகளுக்கு சென்று வந்து கொண்டுள்ளனர். இந்த கிராமத்தில் இருந்து வெள்ளியணை அரசு பள்ளிகள் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன. தினமும் மாணவர்கள் காலையில் 6 கி.மீ, மதியம் 6 கி.மீ என 12 கி.மீ தூரம் நடக்கவேண்டியுள்ளது. இந்த கிராமத்துக்கு ஒரேயொரு தனியார் பேருந்துதான் வருகிறது. வெள்ளியணையில் இருந்து வீரணம்பட்டி வரை செல்லக்கூடிய அந்த தனியார் பேருந்தும், கூட்டம் குறைவாக உள்ள காரணத்தினால் சமீபத்தில் இரண்டு நாள்களாக வடக்கு மேட்டுப்பட்டி கிராமத்திற்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால், சமீபத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திலும் இந்த கிராம மாணவர்கள் பயன்பெறும் வகையில் இங்கே பேருந்து வசதி வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால், பேருந்து வசதி செய்துதரப்படவில்லை.

இந்த நிலையில்தான், பள்ளி செல்ல பேருந்து வசதி இல்லாத காரணத்தினால், பள்ளிகளுக்குச் செல்லாமல் சீருடை அணிந்து ஊர் முன்பு மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அதே கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். எங்களுக்கு அரசு பேருந்து வசதி செய்துதர வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். மாணவர்கள் இப்படி போராட்டத்தில் குதித்த தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், பேருந்து வசதி ஏற்படுத்தி தருவதாகவும், இன்று விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று மாணவர்களிடம் வலியுறுத்தினர்.

மாணவர்கள் போராட்டம்

ஆனால், அதை ஏற்க மறுத்த மாணவ, மாணவிகள், ’எங்களுக்கு தற்காலிக பேருந்து வசதி வேண்டாம், நிரந்தரமாக பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்தால் மட்டுமே பள்ளிக்கு செல்வோம்’ என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், அரசு பேருந்து ஒன்றை இந்த வழித்தடமாக நிரந்தரமாக வருவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக உத்தரவாதம் கொடுத்த பிறகே, மாணவ, மாணவிகள் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்.

மாணவர்கள், அரசின் கவனத்தை தங்களது போராட்டத்தின் வாயிலாக தட்டி, தங்களது கோரிக்கையை செவிசாய்க்க வைத்துள்ளது, பாராட்டை பெற்றிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.