பெங்களூர்: காந்தாரா படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு 20 நாட்கள் விரதம் இருந்தாராம் ரிஷப் ஷெட்டி. கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய படம் காந்தாரா. இந்த படம் கன்னடம் தவிர, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் டப் செய்து வெளியானது. இதுவரை அனைத்து மொழிகளையும் சேர்த்து ரூ.230 கோடி வசூலை ஈட்டியுள்ளது. குறிப்பாக பாலிவுட்டில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட இந்த படம், மவுத்டாக் மூலம் பிரபலமாகிவிட்டது. இந்த படம் 2 வாரத்தில் வட இந்தியாவில் மட்டும் ரூ.42 கோடி வசூலித்துவிட்டது. தீபாவளிக்கு அஜய் தேவ்கன் நடித்த தேங்க் காட், அக்ஷய் குமார் நடித்த ராம் சேது படங்கள் வெளியாகின. இந்த படங்களை ஓரம்கட்டிவிட்டு காந்தாரா பாலிவுட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள காந்தாரா படத்தின் படப்பிடிப்புக்கு முன்பாக 20 நாட்கள் அசைவ உணவு எதுவும் சாப்பிடாமல் ரிஷப் ஷெட்டி விரதம் இருந்தாராம். கர்நாடக மாநிலத்திலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி என்ற காவல் தெய்வத்தை மையப்படுத்தி உருவானது இந்த படம். அதனால்தான் படப்பிடிப்புக்கு முன்பாக விரதம் இருந்ததாக இப்போது கூறியுள்ளார் ரிஷப் ஷெட்டி. பாலிவுட்டில் படம் ஹிட்டானதால் இந்தியில் நடிப்பீர்களா என நிருபர்கள் கேட்டதற்கு, கன்னடத்தில்தான் நடிப்பேன். அந்த படத்தை பாலிவுட்டில் டப்பிங் மட்டுமே செய்வேன் என ரிஷப் கூறினார்.