சிவ்புரி: மத்திய பிரதேசத்தில் சுமார் 8,500 பக்க ஆவணங்களை மாட்டு வண்டியில் தகவல் ஆர்வலர் ஒருவர் எடுத்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் பைராட் நகரை சேர்ந்த மஹ்கான் தாகத் என்ற சமூக ஆர்வலர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது பஞ்சாயத்தில் நடைபெற்ற திட்டங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து இருந்தார். அவருக்கான பதிலை உரிய காலத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் அளிக்க வில்லை. அதனால் அவர் மேல் முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டு அலுவலர் உத்தரவின்பேரில் அவர் கேட்ட கேள்விகளுக்கான தகவல் ஆவணங்கள் வழங்கப்பட்டன. அந்த ஆவணங்களை (8,500 பக்கங்கள்) மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவரது வீட்டிற்கு சென்றார். மேளதாளங்கள் முழங்க மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இருந்தும் சுமார் 12 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய ஆவணத்திற்கு ரூ.25 ஆயிரம் கட்டணம் ெசலுத்தியும் முழுமையான விவரங்கள் அவருக்கு வழங்கப்படவில்லை என்று மஹ்கான் தாகத் குற்றம்சாட்டி உள்ளார்.