திருவனந்தபுரம்: கல்லூரி மாணவரை விஷம் கொடுத்து கொன்ற மாணவி கிரீஷ்மாவின் வீட்டுக்கு போலீசார் சீல் வைத்திருந்த நிலையில், பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூர் கல்லூரி மாணவர் ஷாரோன் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது காதலி கிரீஷ்மா, தாய் சிந்து மற்றும் மாமா நிர்மல்குமார் ஆகியோர் தற்போது கேரள போலீஸ் காவலில் உள்ளனர். சிந்து, நிர்மல் குமாருக்கு 5 நாள் போலீஸ் காவலும், கிரீஷ்மாவுக்கு 7 நாள் காவலும் அளிக்கப்பட்டுள்ளது. மூவரையும் திருவனந்தபுரம் எஸ்பி அலுவலகத்திற்கு கொண்டு சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிரீஷ்மாவுக்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், திருமணம் நடந்தால் முதல் கணவர் மரணமடைவார் என்று ஒரு ஜோதிடர் கூறியதாகவும், அதனால்தான் தங்களுடைய மகனை திருமணம் செய்து, பின்னர் அவரை கிரீஷ்மா கொலை செய்ததாகவும் ஷாரோனின் பெற்றோர் போலீசில் தெரிவித்திருந்தனர். இது உண்மைதானா? என கண்டுபிடிக்க போலீசார் தீர்மானித்துள்ளனர். மூன்று பேரிடமும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இன்று மூன்று பேரையும் குமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன் சிறையில் உள்ள கிரீஷ்மாவின் வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர்.
இன்று இவர்களை வீட்டில் அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட உள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன் சிந்து, நிர்மல்குமாரை திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக இங்கு கொண்டு வந்தனர். ஆனால், அன்று போலீசார் வீட்டுக்குள் செல்லவில்லை. அன்று வீட்டை பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக நேற்று தெரிய வந்தது. இதனால், வீட்டில் ஆதாரங்களை அழிக்க முயற்சி நடந்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.