தமிழகத்தில் மழை எச்சரிக்கை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? வந்தது முக்கியத் தகவல்!

தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 9ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைய சாதகமான சூழல் உள்ளது. தாழ்வு பகுதி உருவான நேரத்தில் இருந்து அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடைந்து, வடமேற்கு திசையில் தமிழ்நாடு, புதுச்சேரி கரையை நோக்கி நகர்ந்து வரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் அடுத்த 3 மணி நேரங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 3 மணி நேரத்தில் செய்யூரில் மிதமான மழையும், சோழிங்கநல்லூர், திருப்போரூர், வண்டலூர், தாம்பரம், திருக்கழுக்குன்றம் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். மேலும் செங்கல்பட்டு, உத்திரமேரூர், மதுராந்தகம் பகுதிகளில் லேசான மழையும், அரக்கோணம் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புழல் ஏரிக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. நேற்று 373 கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று 292 ஆக சரிந்தது. குடிநீருக்காக ஏரியில் இருந்து 159 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஏரிக்கு நீர் வரத்தும் குறைந்தது.

விநாடிக்கு 310 கன அடி நீர் வரும் நிலையில், தொடர்ந்து 5வது நாளாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரிக்கு நீர் வரத்து 177ல் இருந்து 299 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்காசியில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.