ஓடும் ரயிலில் கழன்ற இரண்டு பெட்டிகள் – விசாரணைக்கு உத்தரவு

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு நேற்று இரவு 10 மணியளவில் சேரன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. என்ஜினுடன் சேர்த்து மொத்தம் 23 பெட்டிகள் அதில் இருந்தன. இரவு 11 மணியளவில் ரயிலானது திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4ஆவது நடைமேடை வழியாக சென்றது. அப்போது ரயிலின் S7 மற்றும் S8 ஆகிய 2 பெட்டிகளை இணைக்கும் இரும்பு கொக்கி திடீரென பலத்த சத்தத்துடன் உடைந்தது. இதில் S8 பெட்டியுடன் இணைந்து இருந்த 16 பெட்டிகள் தனியாக கழன்று ஓடின. ரயில் என்ஜினுடன் சேர்ந்த 7 பெட்டிகள் தனியாக சென்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். ரயிலில் இருந்து பயங்கர சத்தம் கேட்டதை உணர்ந்த என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக  ரயிலை நிறுத்தினார். 

இதற்கிடையே தனியாக கழன்று ஓடிய 16 பெட்டிகளும் திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4ஆவது நடைமேடையில் மெதுவாக வந்து நின்றன. இதனையடுத்து ரயிலில் இருந்த பயணிகள் பதறி கீழே இறங்கினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்ததில் சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ரயில் பெட்டி தனியாக கழன்று ஓடியது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரம்பூர் லோகோ பணிமனையில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திருவள்ளூருக்கு விரைந்தனர். 

சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் ரயில் பெட்டிகள் அனைத்தும் இணைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இரவு ஒரு மணியளவில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூரில் இருந்து தாமதமாக புறப்பட்டு சென்றது.ரயில் பெட்டிகளின் இணைப்பு கொக்கி துண்டானது ஏன்? ஊழியர்கள் சரி பார்த்தனரா? என்று உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகிறார்கள். இதுகுறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசாரும் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தென்னக ரெயில்வேவும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.