கோவில்பட்டியில் கார் வைத்திருப்பவருக்கு, சென்னையில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதாக ஃபைனா?!

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்தவர் சிவன்ராஜ். இவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 2018-ல் தனது நண்பர் கோபால்சாமி மற்றும் இருவருடன் காரில் கோவில்பட்டி வழியாக ராமநாதபுரம் மாவட்டம் வெள்ளையாபுரத்திற்கு சென்றார். அப்போது போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சிலைமணி (தற்போது ஆய்வாளர்), காரை மறித்து ஆவணங்களை ஆய்வு செய்தார். இதில் காரில் உள்ளவருக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  காரில் இருந்த முகமது யாஷீர் என்பவரை  ஆய்வாளர் சிலைமணி தாக்கினாராம். பின்னர்  பேச்சுவார்த்தை நடத்தி ரூ.2,000 லஞ்சமாக பெற்றுக்கொண்டு  ’ஹெல்மெட்  அணியவில்லை’ என, கார் ஓட்டுநருக்கு ரூ.100 ரூபாய் அபராதம் விதித்து ரசீது வழங்கியுள்ளார்.

ஆய்வாளர் சிலைமணி

இது குறித்து சிவன்ராஜ், மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்திருந்தார்.  நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த சிலைமணிக்கு ரூ.1 லட்சம்  அபராதம் விதித்ததுடன் அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க கோரியும் தீர்ப்பு வழங்கினார். அதேபோல, கோவில்பட்டியில் கார் வைத்திருப்பவருக்கு சென்னையில் ஹெல்மெட் அணியாமல் டூ வீலர் ஓட்டியதாக போக்குவரத்துப் போலீஸார் ரூ.1,000 அபராதம் விதித்துள்ள சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி, பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் தேன்ராஜா. இவர், தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித் திரிபவர்களை காப்பகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக ஒரு அம்பாசிடர் கார் வைத்துள்ளார்.  இவர், கடந்த 2-ம் தேதி சென்னையில் ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டியதாக ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவரது செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. ’டூ வீலர்’ எனக் குறிப்பிட்டு ஒருவர் ஹெல்மெட் அணியாமல் செல்வது போன்ற புகைப்படத்தையும் அவருக்கு அனுப்பியிருந்தனர். டூ வீலரின் பதிவெண் எனக் குறிப்பிடப்பட்டு, இவரது காரின்  (TN 04 C 9790) பதிவெண் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட சென்னை போக்குவரத்து போலீஸாரை போனில் தொடர்பு கொண்டு கேட்டும் அவருக்கு சரியான விளக்கம் தரப்படவில்லையாம்.

தேன்ராஜா

அவருக்கு அனுப்பப்பட்டிருந்த படத்தில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிச் செல்பவரின் டூ வீலர் பதிவெண் (TN  64 C 9790) எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. பதிவெண் தவறுதலாக குறிப்பிடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அந்த பதிவெண்ணை அவர், செக் செய்து பார்த்ததில் மதுரையைச் சேர்ந்த ஜோதிமுருகன் என உள்ளதாம். தமிழகம் முழுவதும் புதிய போக்குவரத்து விதிகளை அமல்படுத்துவதாகக் கூறும் போலீஸார், வாகன பதிவெண்களை சரியாக கவனிக்காததால் இது போன்ற தவறுகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டுகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.