இலங்கையின் பொருளாதாரத்திற்கு இறால் வளர்ப்பு கனகசமான பங்களிப்பு செய்வதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
உயிரியல் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றின் ஊடாக நிலைபேறான நீர்வேளாண்மை என்னும் தொனிப் பொருளில் கொழும்பில் இன்று (08) நடைபெற்ற நிகழ்வின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொறோனா பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இறால் வளர்ப்பின் மூலம் கடந்த வருடம் சுமார் 43 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாகக் கிடைத்துள்ளது..
இலங்கையில் நீர்வேளாண்மை உற்பத்திகளை வலுப்படுத்துவதற்கான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்ற கொரிய குடியரசு, உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்தார்.
“நீர்வேளாண்மை எனப்படுகின்ற பண்ணை முறையிலான கடலுணவு உற்பத்தி, பருவகால மற்றும் நன்னீர் மீன் போன்றன வளர்ப்பு முறைகள் உணவுப் பாதுகாப்பினை அதிகரித்துக் கொள்வதற்கான சிறந்த வழிவகையாக காணப்படுகின்றது.
குறிப்பாக கடலுணவு உற்பத்திகளை அதிகளவில் உண்பதன் மூலம் தேவையானளவு புரதத்தினை பெற்றுக் கொள்ள முடியும்.
நீர்வேளாண்மை என்பது பல்வேறு உற்பத்தி முறைகளையும் வெவ்வேறான நீரியல் சூழல்களையும் கொண்ட உற்பத்தியாக இருக்கின்ற போதும், நீர்வேளாண்மையை நிலைபேறானதாக மேம்படுத்திக் கொள்வதில் பல்வேறு நாடுகளும் ஆர்வம் செலுத்தி வருகின்றன.
இலங்கையில் நீர்வேளாண்மை உற்பத்திகளை நிலைபேறானதாகப் பேணுவதற்கு கடற்றொழில் அமைச்சினால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக, பண்ணை முறையிலான இறால் உற்பத்தி இலங்கையின் பொருளாதாரத்திற்கு கனிசமான பங்களிப்பினை செய்யும் வகையில் வளர்ச்சியடைந்து வருகின்றது.
பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் 2021 ஆம் ஆண்டு சுமார் 14,414 மெற்றிக்தொன் இறால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 43 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.