தட்டிக் கொடுத்த எடப்பாடி… அப்படியே அந்த 6 விஷயங்கள்… ரெடியான சேலம் அதிமுக!

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் உட்கட்சி பூசல் தீயாய் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையிலான வார்த்தை மோதல் அரசியல் களத்தை அனல்பறக்க செய்து வருகிறது. இதற்கிடையில் 2024 மக்களவை தேர்தல் விஷயத்தில்

கவனத்தை திருப்பியுள்ளார்.

சமீபத்தில் நடந்த நாமக்கல் அதிமுக கூட்டத்தில் வரும் மக்களவை தேர்தலை ஒட்டி தங்கள் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும் என்று தெரிவித்தார். இதையடுத்து சேலம் திரும்பிய எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

ஓமலூர் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.இளங்கோவன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது,

1 – வரும் 2024 மக்களவை தேர்தலில் அதிமுக சிறப்பான வெற்றியை பெறும் வகையில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் தற்போது முதலே தேர்தல் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்

2 – பூத் கமிட்டி அமைக்கும் பணியில் தீவிரம் காட்ட வேண்டும்

3 – கட்சியில் உண்மையான பற்றுள்ள புதிய தொண்டர்களை சேர்க்க கழக நிர்வாகிகள் அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும்

4 – பெயருக்காக தொண்டர்களை சேர்த்து கணக்கு காட்டிவிடக் கூடாது. ஒவ்வொருவரும் அர்ப்பணிப்போடு கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க ஆர்வம் காட்ட வேண்டும்

5 – அடுத்த மக்களவை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் வகையில் மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

6 – ஒருமித்த கருத்தோடு கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதன்மூலம் மக்களவை தேர்தலுக்கு எடப்பாடி தரப்பு தயாராக தொடங்கிவிட்டது தெரியவருகிறது. ஒருபக்கம் திமுக கூட்டணி காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி என பலமாக திகழ்கிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம் அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் பாஜக, தேமுதிக, பாமக ஆகிய மூன்று கட்சிகள் அதிமுக உடன் கூட்டணிக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திமுக உடன் அதிருப்தியில் சிறிய கட்சிகளையும் இழுக்க வேண்டியுள்ளது. இதுதவிர கடைசி நேர ட்விஸ்ட்களும் அதிமுக கூட்டணியை தீர்மானிக்கும் என்று சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.