ஆம் ஆத்மி ஷாக்..! – 'நானாக தான் வாபஸ் வாங்கினேன்' – கஞ்சன் ஜரிவாலா திடீர் விளக்கம்

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலாவை, பாஜகவினர் கடத்தி மிரட்டி வேட்புமனுவை வாபஸ் பெற செய்ததாக தகவல் வெளியான நிலையில், அந்தத் தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க, ஆளும் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சியான காங்கிரசும், பாஜகவுக்கு கடும் போட்டி அளிக்க தயாராக உள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் டஃப் கொடுக்கும் என கூறப்படுகிறது. இதனால் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், சூரத் கிழக்கு தொகுதியில் போட்டியிட இருந்த ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலாவை ஆளும் பாஜகவினர், கடத்தி, துப்பாக்கி முனையில் வேட்புமனுவை வாபஸ் பெற செய்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. இதற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பாஜகவினர் கடத்திச் சென்றதாகக் கூறப்பட்ட கஞ்சன் ஜரிவாலா, நேற்று மாலை போலீஸ் பாதுகாப்புடன் சூரத்தில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகம் சென்று வேட்புமனுவை வாபஸ் பெற்று சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாஜகவினர் கடத்தி மிரட்டி வேட்புமனுவை வாபஸ் பெற செய்ததாக தகவல் வெளியான நிலையில், அந்தத் தகவலை கஞ்சன் ஜரிவாலா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், “நான் ஏன் தேச விரோத மற்றும் குஜராத்தின் வேட்பாளராக ஆனேன் என்று பிரசாரத்தின் போது பொது மக்கள் என்னிடம் கேட்கின்றனர். இதை அடுத்து எனது மனசாட்சி படி யாருடைய அழுத்தமும் இல்லாமல் வேட்புமனுவை வாபஸ் பெற்றேன். தேச விரோத கட்சியை என்னால் ஆதரிக்க முடியாது,” என தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.