வார சந்தை வளாகத்தில் சுகாதார சீர்கேடு: பன்றிகளை அப்புறப்படுத்த கோரிக்கை

குஜிலியம்பாறை: பாளையம் வார சந்தை வளாகத்தில் உள்ள பன்றி கிடைகளை  அகற்ற வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொது  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே பாளையம்  மெயின்ரோட்டில் வாரச்சந்தை வளாகம் உள்ளது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை  வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச்சந்தை வளாகத்திற்குள் தனிநபர் ஒருவர், கிடைகள் அமைத்து அதில் சாக்கடை கழிவு நீரை  தேக்கி வைத்து 80க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வருகிறார். தேங்கி  கிடக்கும் இந்த கழிவு நீர் மற்றும் அதில் சுற்றித்திரியும் பன்றிகளால்  சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அப்பகுதி மக்களுக்கு  தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுது. மேலும்

பன்றிகள் கூட்டம், கூட்டமாக சந்தை வளாகத்தில் சுற்றி  திரிகிறது. இதனால் அங்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது.
இந்த வாரச்சந்தை வளாகத்தில்  கிளை நூலக கட்டிடம் உள்ளது. பன்றிகளால் தொல்லையால்  கிளை நூலகத்திற்கு வருவதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இது குறித்து  இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கிடை அமைத்து பன்றிகள் வளர்க்கப்படும் இடத்தை  ஒட்டி அங்கன்வாடி குழந்தைகள் மையம் உள்ளது. இதனால் இங்கு வரும்  குழந்தைகளுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று பரவும் அபாயம்  உள்ளது. மேலும் குடியிருப்பு பகுதியிலும் பன்றிகள் சுற்றி திரிகின்றன. இது தொடர்பாக பாளையம் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இது  குறித்து பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜலெட்சுமி கூறுகையில்,  ‘‘பன்றிகளால் ஏற்படும் சுகாதார கேடு குறித்து பன்றிகளை வளர்த்து வரும்  சம்பந்தப்பட்ட நபரிடம், சந்தையில் உள்ள கிடைகள் மற்றும் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இது  குறித்து முறையாக நோட்டீஸ் வழங்கப்படும். இதை மீறும்பட்சத்தில், சந்தையில்  சுற்றித் திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த பாளையம் பேரூராட்சி நிர்வாகம்  சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.