பிரியாவின் பெயரில் கால்பந்தாட்ட போட்டி – அண்ணாமலை உறுதி

சென்னையில் அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மாணவி பிரியா உயிரிழந்தார். இதனையடுத்து அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்துவருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் கூறி நிதியுதவியையும் வழங்கினார். இந்தச் சூழலில் உயிரிழந்த மாணவி பிரியாவின் வீட்டிற்கு நேரில் சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாணவியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். 

அவருடன், மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் பிரியாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பு மிக நன்றாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாட்ய். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழ்நாடு அரசு நவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவி பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டியை பாஜக நடத்த உள்ளது. மேலும், பிரியாவின் சகோதரர்கள் தேர்வு செய்யும் 10 பெண்களின் பயிற்சிக்கான செலவை பாஜக ஏற்கும். பிரியாவின் சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் முரண்பட்ட தகவல்களை தெரிவிக்கிறார். முதலமைச்சரின் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் இந்த தவறு நடந்துள்ளது. நிர்வாக கோளாறு காரணமாக ஒரு உயிர் பறிபோயுள்ளது. இந்த உயிரிழப்புக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.

முன்னதாக மாணவி உயிரிழப்பு தொடர்பாக பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மாணவி பிரியா உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதியப்பட்ட பிறகே உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டது. மருத்துவர்களின் முதல் கட்ட அறிக்கையை வைத்து தான் கவனக்குறைவாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

துறை சார்ந்தும் சட்ட ரீதியாகவும் தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவக் குழுவின் இறுதி அறிக்கை ஓரிரு நாளில் வெளியிடப்படும். மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தலைமறைவாக இருந்தால் அவர்களை காவல்துறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்” என கூறியிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.