வல்சாட்: “சுவர் கடிகாரம் விற்பவர்களுக்கு பாலம் மறுசீரமைப்பு பணி ஒப்பந்தத்தைக் கொடுத்த பாஜக அரசை தூக்கி எறிந்துவிட்டு எனக்கு ஐந்து ஆண்டுகள் மட்டும் கொடுங்கள்” என்று வாக்கு சேகரித்தார் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால்.
குஜராத்தின் வல்சாட் நகரில் ஆம் ஆத்மி பேரணி நடந்தது. அதில் பேசிய கேஜ்ரிவால், “மோர்பி நகர் பாலத்தை சீரமைக்கும் பணியை ஒரு சுவர் கடிகார நிறுவனத்திடம் கொடுத்தது பாஜக. அவர்கள் அதுவரை பாலம் கட்டிய அனுபவமே இல்லாதவர்கள். ஆனால், டெண்டர் விடாமல் எந்த ஒரு நடைமுறைகளையும் பின்பற்றாமல் கடிகார தயாரிப்பாளருக்கு அந்த ஒப்பந்தத்தைக் கொடுத்துள்ளனர்.
ஒரீவா குழுமம் அஜந்தா என்ற பிராண்ட் பெயரில் சுவர் கடிகாரங்கள் தயாரிக்கும் நிறுவனமாகும். அந்த நிறுவனத்திடம் மோர்பி பாலத்தின் கட்டுமானப் பணியை எப்படிக் கொடுத்தனர்? 135 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 55 பேர் குழந்தைகள். எனக்கு நீங்கள் 5 வருடம் கொடுங்கள். வெறும் 5 ஆண்டுகள் தான் நான் உங்களிடம் கேட்கிறேன். அந்த ஐந்து ஆண்டுகளில் என் பணிகளில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் அடுத்த தேர்தலில் வாக்கு கேட்க நான் வரமாட்டேன்” என்றார்.
அவருடன் வல்சாட் தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் ராஜூ மர்சா இருந்தார். இந்தத் தொகுதியில் 1990 முதல் பாஜக ஆதிக்கம் தான் நிலவுகிறது. தற்போது இந்தத் தொகுதியில் பாஜகவின் பாரத் படேல் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். இந்த முறையும் இத்தொகுதி பாஜகவுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 தேர்தலில் இவர் காங்கிரஸ் வேட்பாளார் கமல்குமார் படேலை 26 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டமாக வரும் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. தேர்தல் முடிவு டிசம்பர் 8-ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு கடும் சவால் விடுக்கும் நோக்கில் ஆம் ஆத்மி களமிறங்கியுள்ளது.
குஜராத் சட்டப்பேரவையில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 99 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், பாரதிய ட்ரைபல் பார்ட்டி 2 இடங்களிலும் வென்றன. சுயேச்சைகள் 2 இடங்களைக் கைப்பற்றினர். இந்தத் தேர்தலில் பாஜகவே ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறும் நிலையில், 2002 ஆம் ஆண்டு தேர்தலில் படைத்த வெற்றி போல் 127 இடங்களைக் கைப்பற்ற பாஜக வியூகம் வகுத்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.