கேரளாவைச் சேர்ந்த 20 வயதாகும் இளம்பெண், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விமான பணிப்பெண் பயிற்சிக்காக வந்திருக்கிறார். அவர், கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருக்கிறார். இந்தச் சூழலில் கேரள இளம்பெண்ணுக்கு சென்னையைச் சேர்ந்த 25 வயதாகும் நவீன் என்ற இளைஞர் சமூகவலைதளம் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். இருவரும் நட்பாக பழகி வந்திருக்கின்றனர். அப்போது நவீன், தான் கடற்படையில் வேலைப்பார்ப்பதாக கூறியிருக்கிறார்.

இந்தச் சூழலில் நவீன், கேரள இளம்பெண்ணை நேரில் சந்திக்க கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஹோட்டலுக்குச் சென்றிருக்கிறார். பின்னர் இருவரும் அந்தப்பகுதியில் நடந்துச் சென்றபோது நவீன், அந்தப் பெண்ணிடம் காதலை கூறியதாகச் சொல்லப்படுகிறது. அப்பெண் அதனை மறுக்கவே, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த நவீன், இளம்பெண்ணின் முகத்தை பாட்டிலால் குத்தி கிழித்திருக்கிறார். அதனால் வலியால் அலறி துடித்த இளம்பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்திருக்கின்றனர். அதைப்பார்த்த நவீன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து கீழ்ப்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.
காயமடைந்த இளம்பெண், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் முகத்தில் 25 தையல்கள் போடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இளம்பெண் கொடுத்த தகவலின்படி, நவீனைப் போலீஸார் தேடி பிடித்தனர். பின்னர் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கேரளாவைச் சேர்ந்த இளம்பெண், விமான பணிப்பெண்ணாக வேலையில் சேர பயிற்சிக்காக சென்னை வந்திருக்கிறார். அப்போதுதான் நவீன் என்ற இளைஞரால் இந்தக் கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் நவீனிடம் விசாரணை நடத்தி அவரைக் கைது செய்திருக்கிறோம். நவீன், பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு விமான நிலையத்தில் சரக்கு பிரிவில் தற்காலிகமாக பணியாற்றி வந்திருக்கிறார். நவீனால் இளம்பெண், பல்வேறு தொல்லைகளைச் சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. நவீனிடம் விசாரித்தபோது, தன்னிடம் பழகிவிட்டு அந்தப் பெண் ஏமாற்றியதாக கூறியிருக்கிறார். இவர்கள் இருவரின் நட்பு குறித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.