- பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்த குறுகிய மற்றும் நடுத்தரகால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவை உப குழுவில் கலந்துரையாடல்
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் தொடர்புடைய சட்ட மறுசீரமைப்பு சம்பந்தமான பிரேரணைகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நாட்டுக்கு முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாக பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்த குறுகிய மற்றும் நடுத்தரகால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவை உபகுழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் தொடர்புடைய புதிய சட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உபகுழு அண்மையில் (15) கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
விசேடமாக, நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைவதற்குக் காரணமான விடயங்கள், இவற்றில் தற்பொழுதுள்ள சட்டங்களில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக உள்ளனவா போன்றவை தொடர்பில் கலந்துரையாடுவதும் அது தொடர்பில் மேற்கொள்ள எதிர்பார்க்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடுவது முக்கியமானது என அவர் தெரிவித்தார்.
நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் போது நாட்டின் சட்டக்கட்டமைப்பில் ஏற்படுத்தவேண்டிய மறுசீரமைப்புகள் தொடர்பில் இதன்போது நிபுணர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
மத்திய வங்கியின் பணிகள், திறைசேரியின் பணிகளும் பொறுப்புகளும், அரசாங்கத்தின் பணிகளும் பொறுப்புகளும், அரசாங்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் வர்த்தக சமூகத்தினரின் பொறுப்புகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதேபோன்று பாரியளவிலான ஊழல் எதிர்ப்பு செயன்முறையொன்றின் அவசியம் மற்றும் சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றிய பிரேரணைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.
இதுவரை 55 புதிய சட்டங்களை உருவாக்குவது மற்றும் சட்ட மறுசீரமைப்புகள் இடம்பெற்று வருவதாக இதன்போது நீதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொவிட் தொற்று காரணமாக தற்பொழுது நீதிமன்றங்களில் விசாரணை செய்யப்பட்டு வரும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஏற்பட்டுள்ள நிலைமைக்குத் தீர்வாக வழக்கு விசாரணைகளை வினைத்திறனுடன் முகாமைத்துவம் செய்ய வேண்டும் என இதன்போது சிரேஷ்ட சட்டவல்லுனர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கௌரவ நசீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எம். ராமேஸ்வரன், கௌரவ சாகர காரியவசம், நீதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், பல்கலைக்கழக சட்டபீடங்களின் பீடாதிபதிகள், சட்டத்துறை நிபுணர்களான சஞ்சீவ ஜயவர்தன, சரத் ஜயமான்ன, கிரிஷ்மால் வர்ணசூரிய, மைத்ரி குணரத்ன, குணரத்ன வன்னிநாயக்க மற்றும் ஷிரால் லக்திலக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.