திவால் மனு தாக்கல் செய்யப்படவில்லை: தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தரப்பு விளக்கம்

சில்லுனு ஒரு காதல், பருத்திவீரன், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட பல படங்களை ஞானவேல் ராஜாவின் ‛ஸ்டூடியோ கிரீன்' நிறுவனம் தயாரித்தது. தற்போது சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல, சூர்யாவின் 42வது படம், விக்ரமின் தங்கலான் படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில், அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பெற்ற ரூ.10.35 கோடி கடனை வட்டியுடன் ரூ.26.34 கோடியை திருப்பி தரவில்லை என ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை திவாலானவராக அறிவிக்க கோரி மனு தொடரப்பட்டதாக சொல்லப்படும் விவகாரத்தில் ஸ்டூடியோ கிரீன் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், வெளியிட்டுள்ள அறிக்கை:

நான் ஞானவேல் ராஜாவின் சட்ட ஆலோசகர், அவர் ஸ்டூடியோ கிரீனில் பார்ட்னராக உள்ளார். நான் அவரது அறிவுறுத்தலின்பேரில், இந்த பொது அறிக்கையை வெளியிடுகிறேன்.
1. ஞானவேல் ராஜா எனது கட்சிக்காரர். திரைப்படத் துறையில் நன்கு அறியப்பட்ட/புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் எனது கட்சிக்காரருக்கு “ஸ்டூடியோ கிரீன்” என்ற தயாரிப்பு நிறுவனம் உள்ளது, இது சென்னையில் உள்ள புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாகும்.

2. எனது கட்சிக்காரரின் கூற்றுப்படி, ஸ்டூடியோ கிரீன் கடன் வாங்கியதாகவும், அந்நிறுவனத்திடம் இருந்து பணத்தை மீட்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தின் தரப்பில் நியமிக்கப்பட்டவரால் ஒரு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டதாகவும், இந்த மனுவை நீதிமன்றம் அனுமதித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து எனது கட்சிக்காரர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

3. இதனிடையே அதிர்ச்சி அளிக்கும் வகையில், டுவிட்டர், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப்பில் உள்ள பல்வேறு குழுக்கள் உட்பட பல்வேறு சமூக ஊடகங்களில் எனது கட்சிக்காரர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக, “ஞானவேல் ராஜா திவாலானவராக அறிவிக்க வேண்டும்” என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு செய்தியைப் பார்த்தேன்.

4. எனது கட்சிக்காரருக்கு எதிராக எந்த ஒரு திவால் நிலை மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை அல்லது நிலுவையில் இல்லை என்பது பொதுமக்களின் கவனத்திற்கு இதன்மூலம் கொண்டு வரப்படுகிறது. இந்த பொய்யான செய்தி எனது கட்சிக்காரரான ஞானவேல் ராஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

5. எனது கட்சிக்காரருக்கு பல்வேறு திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையுலக பிரபலங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து பல தொலைபேசி அழைப்புகள் வந்து தவறான செய்திகள் குறித்து விசாரிக்கப்படுகின்றன. அனைத்து திரைப்படத் துறை வாட்ஸ்ஆப் குழுக்களிலும், பொதுமக்களுக்கும் மீண்டும் மீண்டும் தவறான செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. எனது கட்சிக்காரரின் நற்பெயரை கெடுக்கும் வகையில் பரவிவரும் அவை பொய்யான செய்திகள் அவதூறானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை.

இந்தச் சூழ்நிலையில், மேற்படி தவறான செய்திக் கட்டுரைகளை அனுப்பும் மற்றும் பரப்பும் நபர்கள் மீது எனது கட்சிக்காரர் சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளை தொடருகிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எனது கட்சிக்காரர் சார்பாக இந்த பொது அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.