போபால்: மத்திய பிரதேசத்தில் பாலியல் பலாத்காரத்தில் கர்ப்பமடைந்த மாணவியை விஷம் கொடுத்து கொன்று கிணற்றில் வீசி எறிந்த ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஹோல் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஒன்றில் ஆசிரியர் சிவேந்திரா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவி ஒருவரிடம் நெருக்கமாக பழகி வந்தார். பின்னர் அந்த மாணவியை பாலியல் பலாதகாரம் செய்தார். இந்த விஷயத்தை அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. அடுத்த ஒரு சில மாதங்களில் மாணவி கர்ப்பமானார். அதையடுத்து அந்த மாணவி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆசிரியர் சிவேந்திராவிடம் முறையிட்டார். ஆனால் அவர், பிரச்னையில் சிக்கிக் கொள்வோமோ? என்ற அச்சத்தில் மாணவியை கொல்ல திட்டமிட்டார்.
மேலும் கர்ப்பத்தை கலைப்பதற்காக தன்னிடம் மருந்து இருப்பதாக கூறி, அந்த மாணவிக்கு விஷத்தை கொடுத்தார். அந்த மாணவியும் அந்த விஷத்தை வாங்கி குடித்தார். சிறிது நேரத்தில் மயக்கமடைந்த மாணவி, வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்தார். அதன்பின் மாணவியின் சடலத்தை தூக்கிச் சென்று, அப்பகுதியில் இருந்த கிணற்றில் தூக்கி வீசினார். பின்னர் சிவேந்திரா தலைமறைவானார். இதற்கிடையே தங்களது மகளை காணவில்லை என்று மாணவியின் பெற் ேறார் போலீசில் புகார் அளித்திருந்தனர். போலீசாரும் மாணவியை தேடிவந்தனர். இந்நிலையில், ஷாஹ்டோல் போலீஸ் எஸ்பி குமார் பிரதீக் கூறுகையில், ‘கிணற்றில் சடலம் ஒன்று கிடப்பதாக கிராமத்தினர் தெரிவித்தனர். அதையடுத்து அந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினோம். அது மாயமான மாணவியின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், மாணவியின் மரணத்தின் பின்னணியில் குடும்பத்தினர் எவருக்கும் ெதாடர்பு இல்லை என்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைஅடிப்படையில் விசாரணை நடத்திய போது, மாணவி விஷம் குடித்திருந்ததும், அவர் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. அதையடுத்து மாணவியை கர்ப்பிணியாக்கியவர் யார்? என்று விசாரணை நடத்தினோம். அதில், மாணவி படித்த பள்ளியின் ஆசிரியர் சிவேந்திரா என்பது தெரிந்தது. அவரை தேடிபிடித்து விசாரித்த போது, மாணவியை தான் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனால் அவர் கர்ப்பமடைந்ததாக கூறினார். மேலும், கர்ப்பத்தை கலைப்பதாக கூறி மாணவிக்கு விஷம் கொடுத்து கொன்றதாகவும், பின்னர் மாணவியின் உடலை கிணற்றில் வீசி எறிந்ததாகவும் கூறினார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரை போக்சோ வழக்கில் கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.