ஈரோடு: கணவன் சித்ரவதை செய்வதாக வாட்ஸ் அப்பில் பெற்றோரிடம் கதறிய தமிழக இளம்பெண்ணையும், குழந்தையையும் பெருந்துறையில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் மீட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை பாலக்கரையை சேர்ந்தவர் சுமித்ரா (22). இவர், கடந்த 2017ல் பெருந்துறையிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் பணியாற்றிய மேற்கு வங்க மாநிலம் கலான்பூர் அம்தோப் பகுதியை சேர்ந்த சுப்ரத தாஸ் என்பவர் சுமித்ராவை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கொல்கத்தாவுக்கு கடத்தி சென்றுள்ளார். அங்கு கடந்த 6 மாதத்துக்கு முன் சுமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், சுமித்ராவை கடந்த 3 மாதமாக சுப்ரத தாஸ் குடி போதையில் அடித்து துன்புறுத்துவதாகவும், சூடு வைத்து சித்ரவதை செய்வதாகவும், வாட்ஸ் அப் வீடியோ காலில் தனது பெற்றோரிடம் கதறி அழுதுள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் மகளை மீட்டு தரக்கோரி ஈரோடு எஸ்பி சசி மோகனிடம் புகார் மனு அளித்தனர். இதை தொடர்ந்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தலைமையில் 2 தனிப்படை போலீசார் கடந்த 17ம் தேதி மேற்கு வங்க மாநிலம் புறப்பட்டு சென்றனர். அங்கு உள்ளூர் போலீஸ் உதவியுடன் சுமித்ராவை நேற்று மீட்டு மங்கள்கோட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அம்மாநில போலீசார் நடத்திய விசாரணையில், சுப்ரத தாஸ் கொடுமைப்படுத்தியது உண்மை என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘மேற்கு வங்க மாநிலத்தில் தவித்த சுமித்ராவை அவரது குழந்தையுடன் மீட்டுள்ளோம். சுமித்ராவிடம் மங்கள்கோட் போலீசார் விசாரித்தபோது, அவர், சுப்ரத தாஸ் மீது புகார் ஏதும் அளிக்கவில்லை. இதனால், அம்மாநில போலீசார் சுப்ரத தாசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுமித்ராவை பெருந்துறைக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.