கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தின் பாங்குரா பகுதியை சேர்ந்தவர் காந்த் குமார் தத்தா (35). அவரது பெயர் ரேஷன் அட்டையில் காந்த் மண்டல் என்று தவறாக அச்சிடப்பட்டது. பெயர் திருத்தம் கோரி மனு அளித்தார். அதன்படி அவரது பெயர் திருத்தப்பட்டது. ஆனால், காந்த் தத்தா என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது முழு பெயர் ஸ்ரீ காந்த் குமார் தத்தா என்பதால் 2-வது முறையாக பெயர் திருத்தம் கோரி மனு அளித்தார்.
நீண்ட நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு ரேஷன் அட்டையில் பெயர் திருத்தம் செய்யப்பட்டது. இந்த முறை அவரது பெயர் ‘தத்தா’ என்பதற்கு பதில் ‘குத்தா’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்தியில் ‘குத்தா’ என்றால் நாய் என்று அர்த்தம். 3-வது முறையாக பெயர் திருத்தம் கோரி மனு அளித்தார். ஆனால் அரசு ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டு அவரை அலைக்கழித்தனர்.
வெறுப்படைந்த அவர் கடந்த 16-ம் தேதி பாங்குராவில் நடைபெற்ற ரேஷன் குறைதீர் முகாமுக்கு ஆவேசமாக சென்றார். சாதாரணமாக நடந்து செல்லாமல் முட்டிங்கால் போட்டு நாயை போல 4 கால்களில் நடந்தபடி குரைத்துக் கொண்டே சென்றார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் காரில் வந்தார். அதைப் பார்த்ததும் தத்தா நாய் போல குரைத்து கொண்டே காருடன் ஓடினார். காரின் ஜன்னல் வழியாக ரேஷன் அட்டை ஆவணங்களை அதிகாரியிடம் அளித்தார். எதுவும் பேசாமல் குரைத்துக் கொண்டே தத்தாவுக்கு பதில் குத்தா என்று எழுதியிருப்பதை கையால் சுட்டிக் காட்டினார். இதன்பிறகு வட்டார வளர்ச்சி அலுவலரின் உத்தரவின்பேரில் ரேஷன் அட்டையில் அவரது பெயர் திருத்தப்பட்டது.
இதுகுறித்து காந்த் குமார் தத்தா கூறும்போது, ‘‘அரசு ஊழியர்கள் தங்கள் பணியில் அலட்சியமாக செயல்படுகின்றனர். கடைசியில் வேறு வழியின்றி ரேஷன் அட்டையில் குறிப்பிட்டிருந்த படி நாயாக மாறிவிட்டேன். அதிகாரியின் வாகனத்தை விரட்டிச் சென்றேன். வட்டார வளர்ச்சி அலுவலர் அதிர்ச்சி அடைந்து தனக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை கடிந்து உத்தரவிட்டு ரேஷன் அட்டையில் பெயரை திருத்தம் செய்து தந்தார்’’ என்று தெரிவித்தார். தத்தா நாய் போல குரைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.