'Bharat Jodo பயணத்தில் விவசாயிகள், பழங்குடியினர் வலியை உணர்ந்தேன்!' – ராகுல் காந்தி

பாரத் ஜோடோ யாத்திரையின் போது, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்த பிறகு அவர்களின் வலியை உணர்ந்ததாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, வரும் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. குஜராத் மாநிலத்தில், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க, ஆளும் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரது சொந்த மாநிலம் என்பதால், இங்கு மீண்டும் வெற்றி பெற, பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும், பாஜகவுக்கு கடும் போட்டி அளிக்க தயாராக உள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் டஃப் கொடுக்கும் என கூறப்படுகிறது. விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக – காங்கிரஸ் – ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று, குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகள் கேட்டு, அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பேசியதாவது:

இந்தியாவின் பூர்வக்குடிகளான பழங்குடியினரை’வனவாசி’ என காடுகளில் வசிப்பவர்களாக குறிப்பிடுகின்றனர். இதன் வித்தியாசம் புரிகிறதா? அதாவது நீங்கள் நகரங்களில் வசிப்பதை அவர்கள் விரும்பவில்லை. உங்களது பிள்ளைகள் இன்ஜினியராகவோ, டாக்டராகவோ, விமானம் ஓட்டுவதையோ, ஆங்கிலம் பேசுவதையோ பாஜகவினர் விரும்பவில்லை.

அவர்களுக்கு நீங்கள் காடுகளிலேயே வசிக்க வேண்டும் என நினைக்கின்றனர். ஆனாலும், உங்களிடம் இருந்து காடுகளையும், நிலங்களையும் எடுத்துக் கொள்வார்கள். பாஜக அரசு காடுகளை நிறுவனங்களுக்கு விற்கின்றன. இது இப்படியே தொடர்ந்தால், இன்னும் 5 – 10 ஆண்டுகளில், உங்களின் அனைத்து காடுகளும் நிலங்களும் இரண்டு, மூன்று தொழிலதிபர்களின் கைகளுக்கு வந்துவிடும். அதன் பிறகு உங்களுக்கு இருக்க இருப்பிடம், கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை எதுவும் கிடைக்காது.

நாட்டின் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட பாரத் ஜோடோ யாத்திரையின் போது, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்த பிறகு அவர்களின் வலியை உணர்ந்தேன். 70 நாட்களில் 1,500 கிலோ மீட்டருக்கு மேல் நடைபயணம் மேற்கொண்டு உள்ளோம்.

இதனால் நாங்கள் சோர்வடையவில்லை. லட்சக்கணக்கானோர் எங்களுடன் சேர்ந்து நடைபயணம் மேற்கொள்கின்றனர். இதுவே ஒற்றுமை யாத்திரை.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.