’தவறான சிகிச்சையால் காலை இழந்தேன்; இந்தநிலை யாருக்கும் வரக்கூடாது’ – பஸ் டிரைவர் கண்ணீர்

தஞ்சை தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் அரசு பேருந்து டிரைவரின் கால் அகற்றப்பட்டது எனவும், மருத்துவமனைமீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர் வீல்சேரில் வந்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா வடக்கூரை சேர்ந்தவர் ஜோதி. அரசு பேருந்து டிரைவர். இவர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வீல்சேரில், ஒரு காலை இழந்த நிலையில் வந்தார். பின்னர் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு அளித்தார். அதில், “நான் தஞ்சை அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றி வருகிறேன். கடந்த மாதம் 4-ந் தேதி ஆயுதபூஜை அன்று, பஸ்சுக்கு பூஜை செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் வந்தபோது அந்த வழியாக வந்த கார் மோதியது.
image
இதில் காலில் அடிபட்ட நான், தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தேன். அங்கு எனக்கு வலது காலில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து காலில் வலி இருந்தது. இது குறித்து மருத்துவர்களிடம் கூறியபோது, மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர். மேலும் காலில் இருபுறமும் கீறல் செய்து கட்டு போட்டனர். பின்னர் அதனை பிரித்தபோது சதைப்பகுதி கெட்டுபோய் விட்டது. ஆனால் ரத்த ஓட்டம் நன்றாக உள்ளது எனக் கூறியதுடன், கால் செயல்திறன் குறைவு எனக் கூறியதால் அதிர்ச்சி அடைந்தோம்.
image
பின்னர் நாங்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சென்று பரிசேரித்தபோது கால்ப்பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. காலை காப்பாற்ற முடியாது என கூறி காலை அகற்ற வேண்டும் எனக் கூறினர். இதையடுத்து வலது கால் அகற்றப்பட்டது. தஞ்சையில் உள்ள மருத்துவமனையில் தகுந்த முறையில் சிகிச்சை அளிக்காமல், அலட்சியமாக சிகிச்சை அளித்தததால் தான் வலது காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. எதிர்காலத்தில் யாருக்கும் இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் இருக்கவும், உரிய விசாரணை செய்து எனக்கு தக்க இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறனே்’’ எனத் தெரிவித்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என நம்பப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.