ஜெய்ப்பூர்: ஆட்சி அதிகாரம் நிரந்தரமானது அல்ல என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் காட்டமாக தெரிவித்தார். மேகாலயாவின் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக், ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் பல்கலைக்கழக மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசுகையில், ‘ஆட்சி அதிகாரம் நிரந்தரமானது அல்ல; இதனை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை யாராலும் அசைக்க முடியாது என்று சொல்லப்பட்டாலும் கூட, அவரது ஆட்சி அதிகாரமும் ஒருகட்டத்தில் போய்விட்டது. அதனால் நீங்களும் (மோடி) ஒரு நாள் சென்றுவிடுவீர்கள். அதனால் நாட்டின் நிலைமையை சீர்செய்ய முடியாத அளவுக்கு கெடுத்துவிடாதீர்கள். இந்திய ராணுவத்தை வலுவிழக்கச் செய்யும், ‘அக்னிபத்’ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்றார்.
ஏற்கனவே மேகாலயா ஆளுநராக சத்ய பால் மாலிக் பதவி வகித்த காலகட்டத்திலேயே, அவர் பிரதமர் மோடிக்கு எதிராகவும், ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் காட்டமான கருத்துகளை தெரிவித்து வந்தார். தற்போது ஆளுநர் பதவியில் இல்லாத நிலையில், மீண்டும் மோடிக்கு எதிராக சத்ய பால் மாலிக் காட்டமான கருத்துகளை கூறிவருகிறார்.