புவனேஸ்வர் ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், நடைமேடையில் காத்திருந்த பயணியர் மூன்று பேர் பலியாகினர்; ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஜாஜ்பூர் மாவட்டத்தில் கோரை ரயில் நிலையம் உள்ளது.
நேற்று காலை டோங்கோபோஸ் என்ற இடத்தில் இருந்து சத்ரபூருக்கு காலி பெட்டிகளுடன் சரக்கு ரயில் சென்றது. கோரை ரயில் நிலையம் அருகே, டிரைவர் திடீர் என பிரேக் போட்டதால், எட்டு பெட்டிகள் தடம் புரண்டன.
இதில் ரயில் நிலையத்தின் நடைமேடை மற்றும் காத்திருப்பு அறை மீது ரயில்பெட்டிகள் மோதி சேதம் அடைந்தன. இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஏழு பேர் படுகாயம்அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; மீட்பு பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.
காயமடைந்தவர்களில் சிலர் அபாய கட்டத்தில் இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இந்த விபத்து காரணமாக ஹவுரா- – சென்னை வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ”ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்,” என அறிவித்துள்ளார்.
விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement