மலேஷியாவில் தொங்கு பார்லிமென்ட்: ஆட்சி அமைப்பதில் சிக்கல்| Dinamalar

கோலாலம்பூர் மலேஷியாவில் சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காததை அடுத்து, தொங்கு பார்லிமென்ட் உருவாகி உள்ளது. புதிய அணிகளை உருவாக்கி ஆட்சியை கைப்பற்ற தலைவர்கள் தீவிர பேச்சு நடத்தி வருகின்றனர்.

உத்தரவு

தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷிய பார்லி.,க்கு கடந்த 19ல் தேர்தல் நடந்தது. இங்கு மொத்தம் 222 தொகுதிகள் உள்ளன.

இரண்டு தொகுதியில் வேட்பாளர்கள் உயிரிழந்ததை அடுத்து, 220 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது.

குறைந்தபட்ச பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 111 இடங்கள் தேவை.

எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான சீர்திருத்த கூட்டணி, 82 இடங்களை பிடித்துள்ளது.

முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான மலாய் தேசிய கூட்டணி, 73 இடங்களில் வென்று உள்ளது.

ஆளும் தேசிய கூட்டணி, 30 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

எந்தவொரு கட்சிக்கும், கூட்டணிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதையடுத்து, அங்கு தொங்கு பார்லி., உருவாகி உள்ளது.

ஆட்சி அமைக்க முயற்சிக்கும் கூட்டணியினர், தங்கள் ஆதரவு எம்.பி.,க்கள் பட்டியலை, மலேஷிய மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவிடம் நேற்று மாலைக்குள் அளிக்கும்படி அரண்மனை அலுவலகம் உத்தரவிட்டது.

மலேஷியாவில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் தேசிய முன்னணி கூட்டணியினர் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்க கால அவகாசம் கோரி உள்ளனர்.

இதையடுத்து, அங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

முன்னாள் பிரதமர் தோல்வி

மலேஷிய முன்னாள் பிரதமர் மஹாதீர் முகமது, 97. இரண்டு முறை பிரதமராக பதவி வகித்தவர். கடந்த 53 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் தோல்வியை சந்திக்காதவர். தற்போது நடந்த தேர்தலில், தன் சொந்த தொகுதியான லங்காவியில் அவர் போட்டியிட்டார்.

இதில் ஐந்துமுனை போட்டியை சந்தித்த அவர், ‘டிபாசிட்’ இழந்து படுதோல்வியைச் சந்தித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.