அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரவும்: ஓபிஎஸ்

சென்னை: தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தாலே தமிழகத்தின் நலன்களும், தமிழக மக்களின் நலன்களும் புறக்கணிக்கப்படுவதும்; தன் நலமும், குடும்ப நலமும் முக்கியத்துவம் பெறுவதும் வாடிக்கை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில், தற்போதைய திமுக ஆட்சியிலும் தன்னலம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் முந்தைய திமுக ஆட்சியில் எதற்காக தொடங்கப்பட்டது என்பதும், பின்னர் அந்த நிறுவனத்தின் பணிகள் எதற்காக முடக்கப்பட்டது என்பதும், இதற்கெல்லாம் காரணம் சுயநலம்தான் என்பதையும் அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் அறிவார்கள். ஆனால், 2011ம் ஆண்டு ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றவுடன், குறைந்த கட்டணத்தில் மக்கள் அதிக தொலைக்காட்சி சேனல்களை கண்டு களிக்கும் பொருட்டு தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.

ஜெயலலிதாவின் நடவடிக்கை அனைத்துத் தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. 2021ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த திமுக, அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக தனியரை நியமித்து ஆணை வெளியிட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவைகள் சரிவர இல்லை என்றும், சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதனைத் தொடர்ந்து, அண்மையில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கேபிள் டிவி சேனல்களை பார்க்க முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கே பிரச்சனை என்னவென்று தெரியாத சூழ்நிலையில் அவர்கள் தங்கள் கைபேசிகளை அணைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் சேவை திடீரென தடைபட்டதாகவும், இன்னும் 24 மணி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்படும் என்றும், இதற்குக் காரணமான தனியார் நிறுவனத்தின்மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் தனியார் நிறுவனத்திற்கான கட்டணத்தை ஓராண்டாக அரசு கேபிள் டிவி நிறுவனம் செலுத்தவில்லை என்றும், அதனால் அந்த நிறுவனம் மென்பொருள் வழங்கும் சேவையை நிறுத்தியுள்ளது என்றும் தகவல்கள் வருகின்றன. அதாவது, அரசு கேபிள் டிவி சேவைகள் முடக்கப்பட்டு இருப்பதற்குக் காரணம் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மைதான் என்பதும், தனியார் நிறுவனம் அல்ல என்பதும் தெளிவாகிறது.

இதில் எது உண்மை என்பதை விளக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசிற்கு உண்டு. தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனமே முடக்கப்பட்டு விடுமோ, தனியார் னுகூழ-க்கு ஆதரவாக அரசு செயல்படுகிறதோ, இனிமேல் குறைந்த செலவில் அதிக சேனல்களை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏழை, எளிய மக்களிடையே நிலவுகிறது. எது எப்படியோ, அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவைகளை முடக்கியுள்ள திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து மக்கள் அனைவரும் குறைந்த செலவில் அதிக சேனல்களை கண்டுகளிக்க வழிவகை செய்ய வேண்டுமென்று முதல்வருக்கு அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.