கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்டையில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அலேசீபம் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மகள் நைனா ஸ்ரீ (10) அதே பகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நைனா ஸ்ரீ நேற்று வீட்டின் அருகே குமார் என்பவருக்கு சொந்தமான விளைநிலத்தில் உள்ள குட்டையின் அருகே தோழியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக நைனா ஸ்ரீ தவறி குட்டையில் விழுந்துள்ளார். இதில் நீரில் மூழ்கிய நைனா ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையறிந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து நைனா ஸ்ரீ உடலை மீட்டனர். பின்பு தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.