பெங்களூரு: கர்நாடகா மாநிலம், சாமராஜாநகர் மாவட்டத்தில் உள்ள ஹெக்கோதரா கிராமத்தில் கடந்த 18ம் தேதி நடந்த திருமணத்துக்கு தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது தெருவில் இருந்த குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்ததாக தெரிகின்றது. இந்த குழாய் மேல் சாதியை சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் குழாய் என்றும் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண் பயன்படுத்தியதாகவும் சர்ச்சை உருவானது. இதன் காரணமாக குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, தொட்டியை பசு கோமியத்தால் கழுவியதாகவும் கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உள்ளாட்சி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அந்த பகுதி தாசில்தார் கூறுகையில், ‘‘தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் குடித்த பெண்ணை யாரும் பார்க்கவில்லை. அவர் யார் என கண்டறிவதற்கு முயற்சித்து வருகிறோம். அதன் பின்னர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இதற்கிடையே அனைத்து குடிநீர் தொட்டியிலும், ‘இந்த தண்ணீரை யார் வேண்டுமானாலும் குடிக்கலாம்’ என்ற வாசகத்தை எழுதி வைக்கின்றனர்.
