
கைலாசாவில் வேலைவாய்ப்பு என்ற விளம்பரம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு கைலாசா கிளைகளில் தகுந்த ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்பு என விளம்பரம் வெளியிடப்பட்டது. ஓராண்டு ஊதியத்துடன் கூடிய பயிற்சிக்கு பிறகு வெளிநாட்டு கைலாசாக்களில் IT wing, அயல்நாட்டு தூதரகம்,பிளம்பிங், எலக்ட்ரிக்கல்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தொடர்பு கொள்வதற்காக இரண்டு செல்போன் எண்களும் கொடுக்கப்பட்டிருந்தன.இதனை சோதனை செய்வதற்காக தொடர்புப்கொண்டு பேசிய போது எல்லாதுறையிலும் வேலை இருப்பதாகவும் குறைந்த பட்ச சம்பளம் பத்தாயிரம் ரூபாய் எனவும் தெரிவித்தனர். மேலும் கைலாசாவில் உள்ள பல்வேறு கிளைகளில் உணவு, மருத்துவ வசதி, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும் எனவும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், கைலாசாவில் உள்ள சுகாதாரத்துறை, கல்வி, வேளாண்மை அமைச்சகம் உள்ளிட்டவற்றில் வேலைவாய்ப்புகள் இருப்பதாகவும், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வானவர்களுக்கு பெங்களூரு, சேலம், திருவண்ணாமலை, காசி, ஐதரபாத் ஆகிய இடங்களில் ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.