காத்மாண்டு : நேபாளத்தில் பார்லிமென்ட் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை துவங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மலைக் கிராமங்களில் இருந்து சில ஓட்டுப் பெட்டிகள் வர தாமதம் ஏற்பட்டு உள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்தில் 275 எம்.பி.,க்களைக் கொண்ட பார்லி., மற்றும் 550 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட ஏழு மாகாண சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.
நாடு முழுதும் உள்ள 1.79 கோடி வாக்காளர்களுக்கு 22 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன; 61 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கியது. தினமும் காலை 7:00 மணிக்கு துவங்கி மாலை 5:00 மணி வரை ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்டாங் தொகுதியில் நேபாள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். நேபாளத்தில் ஓட்டுச் சீட்டு முறையில் தேர்தல் நடப்பதால் ஓட்டு எண்ணிக்கை முடிந்து முழுமையான முடிவை அறிவிக்க ஒரு வாரம் ஆகும் என கூறப்படுகிறது.
ஆளும் நேபாள காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும் என்ற கருத்து நிலவினாலும், யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத தொங்கு பார்லிமென்ட் அமையும் எனவும் சில அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
போலீசார் பலி
இதற்கிடையே, ஓட்டுப்பெட்டிகளை ஒப்படைத்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, பைதான் மாவட்டத்தின் மலைப்பாங்கான பகுதியில் ஜீப் கவிழ்ந்து நான்கு போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர்;எட்டு பேர் காயம் அடைந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement