குஜராத் சட்டசபை தேர்தலில் கோலோச்சும் வாரிசு அரசியல்| Dinamalar

ஆமதாபாத், அரசியலில் பிரிக்க முடியாதது ஜாதியும், வாரிசும். இதற்கு குஜராத்தும் விதிவிலக்கல்ல. அங்கு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், ௨௦ முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.,க்களின் மகன்களுக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ௧௮௨ தொகுதிகள் உடைய சட்டசபைக்கு, டிச., ௧ மற்றும் ௫ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது.

கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆய்வு செய்ததில், ௨௦ முன்னாள் மற்றும் இன்னாள் எம்.எல்.ஏ.,க்களின் மகன்களுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

இதில், காங்., சார்பில், ௧௩ பேரும், பா.ஜ., சார்பில் ஏழு பேரும் போட்டியிடுகின்றனர்.

‘குறிப்பிட்ட தொகுதியில் உள்ள செல்வாக்கு, வேறு தகுதியான வேட்பாளர் கிடைக்காதது, இந்தத் தொகுதியை வென்றாக வேண்டிய கட்டாயம் போன்றவற்றால், வாரிசுகளுக்கு வாய்ப்பு தருவதை கட்சிகளால் தவிர்க்க முடியவில்லை’ என, அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

பழங்குடியினத்தைச் சேர்ந்த, ௧௦ முறை காங்., – எம்.எல்.ஏ.,வாக இருந்த மோகன்சிங் ராத்வா, கடந்த மாதம் பா.ஜ.,வில் இணைந்தார். சோட்டா உதேபோர் தொகுதியில் அவருடைய மகன் ராஜேந்திரசிங் ராத்வாவை பா.ஜ., வேட்பாளராக அறிவித்துள்ளது.

இந்தத் தொகுதியில் முன்னாள் ரயில்வே இணை அமைச்சர் நரன் ராத்வாவின் மகன் சங்ரம்சிங் ராத்வா, காங்., சார்பில் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., கரன்சிங் படேல், ௨௦௧௭ல் பா.ஜ.,வில் இணைந்தார். ஆமதாபாத் மாவட்டம் சனான்த் தொகுதியில், அவருடைய மகன் கனு படேல், பா.ஜ., வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்த ராம்சிங் பர்மர், தாஸ்ரா தொகுதியில், ௨௦௧௭ தேர்தலில் பா.ஜ., வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

இதையடுத்து, பா.ஜ., வில் இணைந்தார். அவருடைய மகன் யோகேந்திர பார்மர், தற்போது இந்தத் தொகுதியின் பா.ஜ., வேட்பாளர்.

ஆமதாபாதின் தானிலிம்டா தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., மனுபாய் பார்மரின் மகன் சைலேஷ் பார்மரை காங்கிரஸ் மீண்டும் நிறுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலாவின் மகன் மகேந்திரசிங் வகேலாவை, பாயட் தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் நிறுத்தியுள்ளது.

கடந்த, ௨௦௧௨ மற்றும் ௨௦௧௭ல் இந்தத் தொகுதியில் காங்., சார்பில் வென்ற அவர், ௨௦௧௯ல் பா.ஜ.,வுக்கு தாவினார். அங்கிருந்து கடந்த மாதம் மீண்டும் காங்.,குக்கு திரும்பினார்.

மற்றொரு முன்னாள் முதல்வர் அமர்சிங் சவுத்ரியின் மகன் துஷார் சவுத்ரியை, பார்டோலி தொகுதியில் காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. இவர் இரண்டு முறை லோக்சபா எம்.பி.,யாக இருந்துள்ளார்.

பா.ஜ., முன்னாள் எம்.பி.,யான மறைந்த விட்டல் ராதாதியாவின் மகன் ஜெயேஷ் ராதாதியா, ஜெத்பூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.