சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் வலுவிழந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக நிலவுகிறது. தொடர்ந்து, இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுவிழக்கக்கூடும். இதன்காரணமாக, வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழக கடற்கரை பகுதி, மன்னார் வளைகுடா பகுதி மற்றும் தெற்கு ஆந்திரா கடற் கரை பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் 23-ம் தேதி வரை செல்ல வேண்டாம் என்றார்.
சென்னையில் குளிர் ஏன்?: சென்னை குளிர்ச்சியான சூழல் நிலவியதற்கான காரணம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, ‘‘வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, இது மேலும் வலுவடைந்து தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்தது. அப்போது, இந்தியாவின் வட மாநிலங்களில் இருந்து குளிர் காற்றை இந்த புயல் சின்னம் ஈர்த்து, தென் பகுதியை நோக்கி நகர்த்தியது. இதுதவிர, பூமியில் இருந்து வெளியே செல்லும் நீண்ட அலை அதிகரித்தது, சூரிய ஒளி குறைந்தது ஆகியவை காரணமாக, சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவியது’’ என்றனர்.