தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார், அடுத்தடுத்து பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தனது கையில் வைத்திருக்கிறார். தற்போது சூரியை முன்னணி கதாபாத்திரமாக வைத்து ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்து இருக்கிறார், இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ‘விடுதலை’ படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது, இந்த படத்திற்காக சூரி கடுமையாக உழைத்து தனது உடலமைப்பில் மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். இந்த படம் 2023ம் ஆண்டின் முதல் அல்லது இரண்டாம் பாதியில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் வெற்றிமாறன் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்திற்கு திரைக்கதை எழுத்துவதாகவும் மற்றும் இணை தயாரிப்பாளராக பணியாற்றப்போவதாகவும் அறிவிப்புகள் வந்தது, இந்த படத்திற்கு ‘அதிகாரம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டது. அதிகாரம் படத்தை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவருமான, ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘காக்கி சட்டை’ போன்ற படங்களின் மூலம் கவனமும் ஈர்த்த இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்குவதாக கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிப்பதாக கூறப்பட்ட அதிகாரம் படத்தின் பணிகள் சில காரணங்களால் கைவிடப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘அதிகாரம்’ படத்தை விடுத்து இயக்குனர் துரை செந்தில்குமார் ரவுடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நயன்தாராவின் 81-வது படத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். தற்போது நடிகர் ராகவா லாரன்ஸின் கைவசம் ‘சந்திரமுகி-2’, ‘ருத்ரன்’ மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படமும் உள்ளது, இந்த படத்தில் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார். மறுபுறம் இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போகும் ‘வாடிவாசல்’ படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.