குவாஹாட்டி: அசாம் போலீஸார், மேகாலயா மக்கள் இடையே நேற்று மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில்அசாம் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். கலவரத்தில் அசாம் வனத்துறை காவலர் உயிரிழந்தார்.
கடந்த 1972-ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் இருந்து மேகாலயா மாநிலம் உதயமானது. அப்போது முதல் இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. மத்திய அரசின்சமரசத்தால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த சூழலில் நேற்று அதிகாலையில் மேகாலயா, அசாம் எல்லையில் முக்ரோ கிராமம் வழியாக கடந்த செல்ல முயன்ற ஒரு லாரியை அசாம் போலீஸாரும் வனத்துறை அலுவலர்களும் தடுத்து நிறுத்தினர். அசாம் வனப்பகுதியில் இருந்து மரங்களை வெட்டி கடத்திவருவதாக போலீஸார் குற்றம் சாட்டினர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
போலீஸாரின் எச்சரிக்கையை மீறி அங்கிருந்து லாரி புறப்பட்டது. அப்போது போலீஸார், லாரியின் டயரை துப்பாக்கியால் சுட்டு பஞ்சராக்கினர். சில தொழிலாளர்களை பிடித்தனர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மேகாலயா எல்லையோர கிராமங்களை சேர்ந்த மக்கள் கம்பு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அசாம் போலீஸார் பிடித்துவைத்திருந்த தொழிலாளர்களையும் லாரியையும் விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அசாம் போலீஸார் மறுப்பு தெரிவிக்கவே, இருதரப்புக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த அசாம் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மேகாலயாவை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். கலவரத்தில் அசாம் வனத்துறை காவலர் உயிரிழந்தார்.
இந்த மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அசாம், மேகாலயா எல்லைப் பகுதியில் இரு மாநிலங்களை சேர்ந்த பொதுமக்களும் பெருந்திரளாக குவிந்தனர். எல்லையில் பதற்ற மான சூழ்நிலை நிலவுகிறது. கலவரம் பரவாமல் தடுக்க மேகாலயாவின் 7 மாவட்டங்களில் அந்த மாநில போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 7 மாவட்டங்களிலும் இணைய சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, ஷில்லாங்கில் நேற்று கூறும்போது, ‘‘அசாம் போலீஸார், வனத்துறை அலுவலர்கள் மேகாலயா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துதுப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.இது தொடர்பாக அசாம் போலீஸார், வனத்துறை அலுவலர்கள் மீது மேகாலயாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேகாலயா மக்கள் அமைதி காக்க வேண்டும்’’ என்றார்.