திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக இவர் உள்ளார். பாஜவுக்கு சென்ற பிறகு திமுக தலைமை மற்றும் முக்கிய நிர்வாகிகள் குறித்து கடுமையாக விமர்சித்து பேசி வரும் அவர், பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சியுடன் சமீபத்தில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த ஆடியோவில், டெய்சிக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்ததுடன், காது கூசும் வகையில் கெட்ட வார்த்தைகளை உபயோகித்து மிகவும் தரக்குறைவாகவும் சூர்யா சிவா விமர்சித்திருந்தார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சூர்யா சிவா குறிப்பிட்ட நாட்கள் கட்சி நிகழ்வில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாகவும், மாநில துணைத்தலைவரான கனகசபாபதி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் திருப்பூரில் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பார்கள் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கனகசபாவதி தலைமையில் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில், டெய்சி, சூர்யா சிவா ஆகிய இருவரும் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கங்களை அளித்தனர். அப்போது, இரு தரப்பையும் சமாதானம் செய்து வைக்கப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த இருவரும், பாஜகவின் சித்தார்த்தங்களால் ஈர்க்கப்பட்டு கட்சியில் சேர்ந்ததாகவும், கண்பட்டது போல ஒரு அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.
டெய்சி பேசுகையில், சூர்யா தனக்கு தம்பி போலத்தான் எனவும், அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசிய வார்த்தைகள் அரசியல் காரணங்களுக்காக சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர் எனவும் தெரிவித்தார். இருவரும் பரஸ்பரம் சுமூகமாக பிரச்சனையை முடித்துக் கொள்வது என முடிவெடுத்துள்ளதாகவும், எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், சூர்யா சிவா கூறுகையில், தான் பேசியது தவறுதான் எனவும், இதற்காக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன்பு எழுத்துப் பூர்வமாக தனது விளக்கத்தை அளித்திருப்பதாகவும், தன் மீது நடவடிக்கை எடுத்தாலும் அதனை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், செல்போனில் பேசிய தங்கள் இருவரிடமிருந்தும் அந்த ஆடியோ வெளியே செல்லவில்லை எனவும், அரசியல் காரணங்களுக்காகவே அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப் பட்டதாகவும், பாஜக கட்சி மற்றும் தலைவர் அண்ணாமலைக்கு களங்கம் விளைவிக்கவே தொடர்ந்து அந்த ஆடியோ பரப்பப்பட்டு வருவதாகவும் சூர்யா சிவா தெரிவித்தார்.
தன்னை தரக்குறைவாக மிகவும் கொச்சையாக பேசிய சூர்யா சிவா தனது தம்பி போலத்தான் என டெய்சி தெரிவித்துள்ளது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. அரசியலில் இதெல்லாம் சகஜம் தான் என்ற கவுண்டமணியின் காமெடியையும், ‘அவன் குடும்பத்தை நான் அசிங்கமா பேசுவேன், என் குடும்பத்தை அவன் அசிங்கமா பேசுவான்’ என்ற வடிவேலு-சத்தியராஜ் பட காமெடியையும் வைத்து நெட்டிசன்கள் அவர்கள் இருவரையும் கடுமையாக கலாய்த்து வருகிறார்கள்.
முன்னதாக வெளியான ஆடியோவில், “’நீ அனுபவிப்ப… இதுவரைக்கும் என்னை தம்பியாதான பார்த்திருக்க; இனிமே எதிரியா பார்ப்ப” என்று சூர்யா சிவா சொல்ல அதற்கு பதிலளித்த டெய்சி, “நான் எப்ப உன்னை தம்பியா பார்த்தேன்.” என எதிர்கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால், பேச்சுவார்த்தைக்கு பின்னர், சூர்யா சிவா தனது தம்பி போலத்தான் என டெய்சி கூறியிருக்கிறார். பெண் என்றும் பாராமல் டெய்சியை ஆபாசமாக வசை பாடிய சூர்யா சிவாவுக்கு எதிராகவும், டெய்சிக்கு ஆதரவாக கட்சி பேதமின்றி பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், அதனை 3 மணி நேர சமாதான பேச்சுவார்த்தையில் டெய்சி உடைத்தெறிந்து விட்டார் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
காயத்ரி ரகுராமுக்கு போட்ட ஸ்கெட்ச்சா?
தமிழ்நாடு பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவர் இருந்த காயத்ரி ரகுராம், கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் கட்சி மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார். தன்னைக் கேலி செய்தோ, விமர்சித்தோ எழுதப்படும் ட்வீட்களுக்கு கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமான சிலர் லைக் போடுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, டெய்சிக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் ஒன்றையும் அவர் பதிவிட்டிருந்தார். அதில், சொந்தக் கட்சி பெண்களை ஏன் தாக்க வேண்டும். இந்த கழுதைப்புலிகளை வைத்து அழகு பார்க்க கட்சியின் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு என்று பதிவிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக, காயத்ரி ரகுராம் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார்.
டெய்சிக்கு ஆதரவாகவும், சூர்யா சிவா உள்ளிட்ட அண்ணாமலைக்கு நெருக்கமானவர்களாக அறியப்படும் நபர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்த காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், தற்போது டெய்சி உள்ளிட்ட அனைவரும் இணைந்து விட்டனர். எனவே, இது காயத்ரி ரகுராமுக்கு போட்ட ஸ்கெட்சா எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.