வழக்கறிஞர் பண்பற்ற கேள்வி.. மன்னிப்பு கேட்ட நீதிபதி: உயர் நீதிமன்றத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!

‘இந்த நீதிமன்றம் விசித்திரமான பல வழக்குகளை சந்தித்திருக்கிறது, புதுமையான பல மனிதர்களை கண்டிருக்கிறது’ என்ற பிரபலமான திரைப்பட வசனம் மீண்டும் உதாரணமாகியுள்ளது.

நீதிமன்றத்தின் மூலமே நீதியை நிலைநாட்ட முடியும் என்ற போதும் சாமனியர்கள் பலரும் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏற அச்சப்படுகின்றனர். விசாரணையின் போது கேட்கப்படும் சில கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் காவல்நிலையம், நீதிமன்றம் செல்வதை தவிர்க்கின்றனர். இது குற்றம் புரிபவர்களுக்கு சாதகமாகிவிடுகிறது.

சட்ட விழிப்புணர்வு பரவலாக்கப்பட வேண்டும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் வழக்கறிஞர்கள் சிலர் எல்லை தாண்டாமல் நாகரீக

மான முறையில் பேச வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் வழக்கறிஞர் ஒருவர் நாகரீகமற்ற முறையில் பேசியதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி மன்னிப்பு கேட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகப்பிரிவினை வழக்கின் குறுக்கு விசாரணையின் போது, பெண் மனுதாரரிடம், பண்பற்ற முறையில் வழக்கறிஞர் கேள்வி எழுப்பியதற்கு, மேல்முறையீட்டு மனு தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மன்னிப்பு கோரியுள்ளார்.

தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில், பாகப்பிரிவினை தொடர்பான வழக்கில், குறுக்கு விசாரணையின் போது, இரண்டாவது மனைவியின் மகன் தரப்பு வழக்கறிஞர், மூன்று பெண்களின் தந்தை மீதான உரிமை குறித்தும், அவர்களின் தாயை அவமதிக்கும் வகையிலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதிமன்றத்திலேயே இந்த விவகாரம் நடைபெற்றுள்ளதால், அதற்காக உயர் நீதிமன்றம் மன்னிப்பு கோருவதாக நீதிபதி பரத சக்கரவர்த்தி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வழக்குகளில் மனுதாரர்களை அல்லது எதிர் மனுதரார்களை அவமானப்படுத்துவதற்காகவோ, அவர்களுக்கு காயத்தை ஏற்படுத்துவதற்காகவோ குறுக்கு விசாரணை இல்லை என தெரிவித்துள்ள நீதிபதி, தங்களது உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடும் பெண்களின் நடத்தையை படுகொலை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கக்கூடாது எனவும் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.

பரத சக்கரவர்த்தி போன்ற நீதிபதிகளின் முதிர்ச்சியான செயல்பாடுகள் தான் சாமானியர்களுக்கு நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை தொடர்ந்து தக்கவைக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.