திருவள்ளூர் அருகிலுள்ள வயலூர் கிராமம் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரின் மகள் கீர்த்தனா. இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
சமீப நாட்களாக கீர்த்தனா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு, அதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கீர்த்தனாவின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த போது வீட்டின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கதவு பூட்டப்பட்டிருந்தது.
இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் உடனே கீர்த்தனாவின் மொபைலுக்கு அழைத்தும் அவர் எடுக்கவில்லை. அதன் பின்னர் அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது கீர்த்தனா மின்விசிறியில் தூக்குப்போட்டு சடலமாக தொங்கினார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்து பெற்றோர் கதறி அழுதனர். இதைக்கேட்ட ஓடி வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவலித்தனர்.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்த பிறகு, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.