பழம்பெரும் ஹிந்தி நடிகர் விக்ரம் கோகலே மறைவு

கமல்ஹாசனின் ஹேராம் உட்பட மராத்தி, ஹிந்தி படங்களில் நடித்த மூத்த நடிகர் விக்ரம் கோகலே(78) உடல்நலக் குறைவால் காலமானார். உடல்நல பிரச்னையால் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மருத்துவமனையில் சில தினங்களுக்கு அனுமதிக்கப்பட்டார் விக்ரம் கோகலே. தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வந்த போதிலும் உடல் செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தன. ஒருக்கட்டத்தில் கோமா நிலைக்கு சென்ற விக்ரம் கோகலே இன்று(நவ., 25) மறைந்தார்.

மகாராஷ்டிராவை சேர்ந்த விக்ரம் கோகலே, 1945ம் ஆண்டு நவ., 14ம் தேதி புனேயில் பிறந்தார். இவரது குடும்பமே கலைக் குடும்பத்தை சேர்ந்தது. இவரது கொள்ளுபாட்டி துர்காபாய் காமத் இந்தியாவின் முதல் பெண் சினிமா நடிகை ஆவார். இவரது பாட்டி கமலாபாய் கோகலே நாட்டின் முதல் பெண் குழந்தை நட்சத்திரமாவார். இவரது தந்தை சந்திரகாந்த் கோகலேவும் மராத்தி நாடக நடிகராக இருந்தார்.

குடும்பத்தினரை போன்றே இவரும் சினிமா மீது நாட்டம் கொண்டார். 1971ம் ஆண்டு அமிதாப்பின் பர்வானா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அக்னிபாத், மிஷன் மங்கள் உள்ளிட்ட நூற்றக்கணக்கான படங்களிலும், நாடகங்களிலும் நடித்துள்ளார். கமல்ஹாசனின் ஹேராம் படத்திலும் நடித்தார். கடந்த 2013ல் அனுமாட்டி என்ற மராத்தி படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

விக்ரம் கோகலேயின் மறைவுக்கு ஹிந்தி திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.