கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகரான டொராண்டோவில் ஷெரிடன் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் சைனி (20) என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி மாலை 4.30 மணியளவில் யங் ஸ்ட்ரீட் மற்றும் செயின்ட் கிளேர் ஆவென்யூ சந்திப்பில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அங்கு கார்த்திக் சாலையை கடக்க முயன்றபோது வேகமாக வந்த லாரி ஒன்று அவர் மீது பயங்கரமாக மோதியது. மேலும் சில மீட்டர் தூரத்துக்கு அவர் இழுத்து செல்லப்பட்டார்.
இந்த கோர விபத்தில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது உறவுக்காரர் பர்வீன் சைனி, கார்த்திக்கின் உடல் உரிய முறையில் அடக்கம் செய்ய கூடிய விரைவில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என அவரது குடும்பத்தினர் நம்புவதாக தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து சேவை பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். விபத்து தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் தொடர்பாக உள்ளூர்வாசிகள் மற்றும் ஓட்டுநர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.