அகமதாபாத்: குஜராத் மாநிலம் கேதா நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்ற போது, தீவிரவாதிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக எங்கள் 2 தலைவர்களை தீவிரவாதத்துக்கு தியாகம் செய்துள்ளோம். நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்பிய இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகிய இருவரையும் இழந்தோம்.
ஆனால், தீவிரவாத ஒழிப்பு விவகாரத்தில் காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் செய்வதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். இது தவறு. நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய ஒரு தலைவராவது பாஜகவில் இருக்கிறாரா? இங்கு நடைபெறுவது மாநில சட்டப்பேரவைத் தேர்தல். நாடாளுமன்ற தேர்தல் அல்ல. எனவே, மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாங்கள் விரும்புகிறோம். கடந்த 27 ஆண்டுகளாக இங்கு ஆட்சியில் இருக்கும் பாஜக செய்த சாதனைகள் மற்றும் தவறுகளை பிரதமர் மோடி பேசினால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.