காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டம் (CSIAP) முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த திட்டம் தொடர்பான இரண்டாவது மாவட்ட வழிப்படுத்தல் குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இன்று (29) காலை மாவட்ட செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் உலக வங்கியின் நிதி உதவியுடன் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த திட்டத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் பிரதி திட்ட பணிப்பாளர் A.C.G பாபுவினால் விளக்கமளிக்கப்பட்டது.
தடைப்பட்டுள்ள திட்டங்களின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
காலநிலைக்கு ஏற்றவகையில் விவசாய நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதனை நோக்காகக் கொண்ட இத் திட்டம் முல்லைத்தீவில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டிசுட்டான், துணுக்காய் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
விவசாய குளங்கள், விவசாய வீதிகள், விவசாய கிணறுகள் புனரமைப்பு, தானிய களஞ்சியங்கள் அமைத்தல் மற்றும் விவசாய ஊக்குவிப்பு நடவடிக்கைகள் முதலானவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறி்ப்பிடத்தக்கது.
2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த திட்டம் 2024ம் ஆண்டு நிறைவடையவுள்ளமை குறி்ப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாசன், காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் பிரதித் திட்ட பணிப்பாளர் A.C.G பாபு, நீர்ப்பாசன பொறியியலாளர், குறித்த திட்ட பிரதேசங்களின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர், வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
Logini Sakayaraj